சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) சட்டப் பள்ளி, மீண்டும் கெண்ட் ரிட்ஜ் வளாகத்துக்கு இடம் மாறவுள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் என்யுஎஸ் சட்டப் பள்ளி இடம் மாறும். 19 ஆண்டுகளாக அப்பள்ளி புக்கிட் தீமாவில் உள்ள என்யுஎஸ் வளாகத்தில் செயல்பட்டு வந்துள்ளது.
கெண்ட் ரிட்ஜில் தற்போது யேல்-என்யுஎஸ் கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் சட்டப் பள்ளி அமையும் என்று திங்கட்கிழமையன்று (மே 27) அறிக்கை ஒன்றில் என்யுஎஸ் தெரிவித்தது. யேல்-என்யுஎஸ் கல்லூரியில் எஞ்சியிருக்கும் மாணவர்கள் தங்களின் பட்டக் கல்வியை முடித்தவுடன் சட்டப் பள்ளி இடம் மாற்றப்படும் என்றும் என்யுஎஸ் குறிப்பிட்டது.
இந்நடவடிக்கை, சட்டத் துறை சாராத பாடங்களைப் பயில விரும்பும் சட்டக் கல்வி மாணவர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று என்யுஎஸ் சட்டப் பள்ளித் தலைவரான ஆண்ட்ரூ சிமெஸ்டர் குறிப்பிட்டார். சட்டத் துறைக்கும் சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு, நீடித்த நிலைத்தன்மை போன்ற பல்வேறு துறைகளுக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் அதிகரித்து வருவதை அவர் சுட்டினார்.
“தனித்துவம் வாய்ந்த தனது சட்டத் துறைப் பட்டக் கல்விப் பாடத் திட்டங்களை, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முழுமையான தனது மற்ற இளநிலைப் பட்டக் கல்விப் பாடத் திட்டங்களுடன் பல்கலைக்கழகம் மேலும் ஒருங்கிணைக்கிறது. அதில் இந்நடவடிக்கை குறிப்பிடத்தக்க ஒரு முயற்சியாகும்,” என்று என்யுஎஸ் தனது அறிக்கையில் விளக்கியது.
கெண்ட் ரிட்ஜில் உள்ள என்யுஎஸ்ஸின் தலைமை வளாகத்தில் சுமார் 50,000 மாணவர்கள் பயில்கின்றனர். சட்டப் பள்ளி இடம் மாறுவதன் மூலம் கெண்ட் ரிட்ஜ் வளாகத்தில் பயிலும் மாணவர்களுடன் சட்டக் கல்வி மாணவர்கள் பழகக் கூடுதல் வாய்ப்புகள் அமையும்.
என்யுஎஸ் சட்டப் பள்ளியில் தற்போது 1,000 இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்களும் 250 முதுநிலை பட்டக் கல்வி மாணவர்களும் பயில்கின்றனர். அங்கு 160 ஊழியர்களும் பணிபுரிகின்றனர்.
என்யுஎஸ்ஸின் புக்கிட் தீமா வளாகத்தில் தற்போது சட்டப் பள்ளி அமைந்துள்ள பகுதியை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு என்யுஎஸ் பதிலளித்தது.

