போப்பாண்டவர் தலைமையில் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு குலுக்கல் முறை நுழைவுச்சீட்டுகள்

2 mins read
7d61432c-148b-49cd-9b09-77aeab79887a
போப்பாண்டவர் செப்டம்பர் மாதம் சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். - படம்: ஏஎஃப்பி

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் முதல்முறையாக போப்பாண்டவரின் தலைமையில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

குலுக்கல் முறை மூலம் பிரார்த்தனைக் கூட்டத்துக்கான நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். நுழைவுச்சீட்டு குலுக்கல் முறை ஜூன் 24ஆம் தேதிக்கும் ஜூலை 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்படும்.

87 வயது போப்பாண்டவர் ஃபிரான்சிஸின் தலைமையில் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியன்று பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப்பாண்டவர், சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். அவர் சிங்கப்பூருக்கு வருவது இதுவே முதல்முறை.

அவரது பயணத்தின் இரண்டாவது நாளன்று இப்பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும்.

40,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் இருப்பதாகவும் அவற்றைப் பெறுவோரை நிர்ணயிக்க இணையம் வழி குலுக்கல் முறை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

myCatholicSG இணையவாசல் கணக்கு வைத்திருப்போர் நுழைவுச்சீட்டு குலுக்கல் முறையில் பங்கெடுக்கலாம்.

நுழைவுச்சீட்டைப் பெற விரும்புவோர் ஜூன் 24லிருந்து தங்கள் myCatholicSG இணையவாசல் கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மின்நுழைவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும். நுழைவுச்சீட்டுகள் இலவசம். நுழைவுச்சீட்டுகளைப் பெறுபவர்கள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம்.

அவற்றை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

நுழைவுச்சீட்டு குலுக்கல் முறையின் முடிவுகள் myCatholicSG இணையவாசல் மூலம் ஆகஸ்ட் 1லிருந்து வெளியிடப்படும்.

நுழைவுச்சீட்டு கிடைத்ததும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

குலுக்கல் முறையில் நுழைவுச்சீட்டு பெறாதவர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவர்.

நுழைவுச்சீட்டு கிடைத்தும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து உறுதி செய்யாதவர்களின் நுழைவுச்சீட்டுகள் இவர்களுக்குத் தரப்படும்.

மேல்முறையீடுகள் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனைக் கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ள முடியாதோருக்காக போப்பாண்டவர் தலைமையிலான பிரார்த்தனைக் கூட்டம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்