மருத்துவ விடுப்புக்கான கடுமையான விதிமுறைகள் நோயாளிகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த தசாப்தங்களில் சேண்ட்ரா (உண்மை பெயர் அல்ல) தான் நோய்வாய்ப்பட்டிருப்பதாக மருத்துவர்களை நம்ப வைப்பதற்காக பகீரத முயற்சிகளை எடுத்துள்ளார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு என் கண்கள் சிவந்திருப்பது போல இருப்பதற்காக வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்யை சில சொட்டுகள் கண்களில் விட்டுக் கொண்டேன். மருத்துவர் என்னை பரிசோதித்த பிறகு விழிப்படல அழற்சி இருப்பதாகக் கூறி மூன்று நாள் மருத்துவ விடுப்பு கொடுத்தார். வீட்டிலிருந்து வெளியே போகாமல் தொலை மருத்துவ சேவை மூலம் மருத்துவ விடுப்பு பெறுவது எளிதாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
இருந்தாலும் வேலைப் பளு, வேலையில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு ஓய்வு எடுப்பதற்காக 14 நாள் வருடாந்திர விடுமுறை, 14 நாள் மருத்துவ விடுப்பு போதவில்லை என்று அவர் எண்ணுகிறார்.
ஒரு சிலர் இவரைப் போல இருந்தாலும் தங்களிடம் வரும் பெரும்பாலான நோயாளிகள் உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஐந்து மருத்துவர்கள், இரண்டு தொலை மருத்துவ சேவை வழங்குவோர் தெரிவித்தனர்.
வேலை, பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்காக சிலர் நோய்வாய்ப்பட்டதுபோல நடித்தாலும் மருத்துவ சிகிச்சை, மருத்துவ விடுப்பு வழங்குவதை மறுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவ விடுப்பு வழங்கும்போது மருத்துவர்கள் தங்களுடைய அனுபவத்தையும் மருத்துவ தீர்வுகளையும் நம்பியிருக்கிறார்கள் என்று ‘ரெக்ஸ்மெட்’ தொலை மருத்துவ சேவை நிறுவனர் டாக்டர் டானா எலியட் ஸ்ரீதர் தெரிவித்தார்.
“சமநிலையுடன் முடிவு எடுக்கப்பட வேண்டும். நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ விடுப்பு மறுக்கப்படக்கூடாது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பொதுவாக உள்ள தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை மனநலப் பிரச்சினையாக நோயாளிகள் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
மருத்துவர்கள் அதிகப்படியாக, முறையற்ற வகையில் மருத்துவ விடுப்புகளை வழங்குவதைத் தடுப்பற்காக சுகாதார அமைச்சு, விதிமுறைகளைக் கடுமையாக்கும் யோசனை இருப்பதாக வெளியான தகவலால் இவ்விவகாரம் பலர் பேசும் பொருளாகி உள்ளது.
கடந்த ஏப்ரலில் மருத்துவர்களுக்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் வேலை, பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக ஏராளமானோர் மருத்துவ விடுப்பு பெறுவதாக அமைச்சு கவலை தெரிவித்திருந்தது.
பொதுநல மருத்துவரான முகம்மது ஃபைசால், நோயாளிகளை நேரடியாக பார்த்தால்தான் நோயைப் பற்றி துல்லியமாக தீர்மானிக்க முடியும் என்றார்.
ஷிஃபா கிளினிக் அண்ட் சர்ஜரியின் மருத்துவரான அவர், மருத்துவ விடுப்புக்கான கடுமையான விதிமுறைகள் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்ற உதவும் என்று குறிப்பிட்டார்.
அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்குவதை மறுக்க மாட்டோம் என்றார் அவர்.
ஒயிட்கோட் எனும் தொலை மருத்துவ சேவை நிறுவனமும் கடுமையான விதிமுறைகளை அமலாக்க விரும்பும் சுகாதார அமைச்சை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அத்தகைய நடவடிக்கை மருத்துவ தொழிலில் நம்பிக்கையை மேம்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

