சிங்கப்பூரின் தனியார் கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் விலை ஏப்ரலில் 1.5 விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆறு மாதங்களாக அவற்றின் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல் விற்பனையான மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கையும் 13 மாதங்களுக்கு இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
மே 27ஆம் தேதி சொத்து விற்பனை இணையத் தளங்களான ‘எஸ்ஆர்எக்ஸ்’, ‘99.கோ’ வெளியிட்ட தரவுகள் மூலம் இது தெரிய வருகிறது.
ஏப்ரலில் ஏறக்குறைய 1,122 தனியார் கூட்டுரிமை வீடுகள் கைமாறியிருக்கின்றன. இது, மார்ச் மாத நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 991 வீடுகள் அதிகம். ஆண்டு அடிப்படையில் பார்த்தால் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 25.8 விழுக்காடு கூடியிருக்கிறது. ஐந்து ஆண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் இது 17.6 விழுக்காடு உயர்வாகும்.
ஏப்ரலில் சிங்கப்பூரின் எல்லா வட்டாரங்களிலும் மறுவிற்பனை வீட்டு விலை கூடியிருக்கிறது.
மத்திய வட்டாரத்தைத் தவிர எஞ்சிய பகுதிகளில் இரண்டு விழுக்காடு விலை அதிகரித்தது. இதற்கு அடுத்ததாக முக்கிய அல்லது முதன்மை வட்டாரத்தில் 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. மத்திய வட்டாரத்துக்கு வெளியே, நகர்ப்புறங்களில் சுமார் 0.1 விழுக்காடு தனியார் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலை ஏறியது.
ஆண்டு அடிப்படையில் மறுவிற்பனை விலை 5.1 விழுக்காடு அதிகரித்தது. மத்திய வட்டாரத்துக்கு வெளியே புறநகர்ப்பகுதிகளில் விலை 7.2 விழுக்காடு உயர்வு பதிவாகியுள்ளது. மத்திய வட்டாரத்தில் 5.2 விழுக்காடு கூடியது. முக்கிய அல்லது முதன்மை பகுதிகளில் உள்ள வீடுகள் 0.2 விழுக்காடு வரை உயர்வு கண்டது.

