ஊழியர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி நன்றி

ஊழியர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி நன்றி

2 mins read
777aace5-da1e-49d5-b1b1-eab13a697388
நடுவானில் தத்தளித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நடுவானில் காற்றுச்சுழற்சியில் சிக்கித் தவித்த விமானம் மீண்டு வந்த சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் தமது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

அவசரமாக பேங்காக்கில் தரை இறங்கிய அந்த விமானம், கிட்டத்தட்ட ஐந்து நாள்களுக்குப் பிறகு சிங்கப்பூர் திரும்பிய ஞாயிற்றுக்கிழமை திரு கோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஓய்வு எடுக்குமாறும் தங்களது அன்புக்குரியவர்களுடன் பொழுதைக் கழிக்குமாறும் விமான ஊழியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

“சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடந்த ஐந்து நாள்கள் கடும் சவால் நிறைந்தவையாக இருந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை (மே 21) நிகழ்ந்த சம்பவமே அதற்குக் காரணம்.

“ஐராவதி ஆற்றுப் பள்ளத்தாக்கின் மீது பறந்துகொண்டு இருந்தபோது விமானம் கடுமையாக ஆட்டம் காண நேரிட்டது. ஒருவர் உயிரிந்த நிலையில் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன,” என்று திரு கோ தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “மாண்டவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

“விரைந்து செயலாற்றுதல், அர்ப்பணிப்பு மற்றும் குழு உணர்வை நாம் அந்த நேரத்தில் நன்றாக வெளிப்படுத்தினோம்.

“சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நெருக்கடி நிர்வாகக் குழுவும் துணைக்கு வந்தது.

“பேங்காக்கில் உள்ள நமது அலுவலகத்தில் உள்ளோரும் உள்ளூர் பங்காளிகளும், கிடைக்கக்கூடிய எல்லா வளங்களையும் மருத்துவக் குழுக்களையும் திரட்டினார்கள்,” என்றார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் எஸ்கியூ321 விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 21) லண்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய வேளையில் மாலை 4.30 மணியளவில் மியன்மார் வான்பகுதியில் பறந்துகொண்டு இருந்தபோது காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது.

விமானம் கடுமையாக ஆட்டங்கண்டு குலுங்கியதன் காரணமாக 73 வயது பிரிட்டிஷ் முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

பேங்காக் மருத்துவமனைகளில் இன்னும் பல பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆட்டம் கண்ட விமானத்தை பேங்காக்கில் அவசரமாகத் தரை இறக்கி இருந்தார் விமானி.

குறிப்புச் சொற்கள்