பெருந்தொற்று விதிகளை மீறி 34 பேருடன் போதை விருந்து: ஆடவர் ஒப்புதல்

பெருந்தொற்று விதிகளை மீறி 34 பேருடன் போதை விருந்து: ஆடவர் ஒப்புதல்

1 mins read
f5e6a15e-9e86-4b78-b5b1-4bc06fbb3978
குற்றங்களை ஒப்புக்கொண்ட எட்மண்ட் ஸக்காரி ஓங் வெய் மிங், 33. - படம்: சமூக ஊடகம்

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் விதிகளை மீறி போதைப்பொருளுடன் பிறந்த நாள் விருந்து அளித்த குற்றத்தை ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை (மே 27) ஒப்புக்கொண்டார்.

பெருந்தொற்று பரவியபோது ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்ற விதிமுறை நடப்பில் இருந்தது. 2022ஆம் ஆண்டிலும் அந்த விதிமுறை தொடர்ந்தது.

2022 மார்ச் 26ஆம் தேதி இரவு 7 மணியளவில் எட்மண்ட் ஸெக்கரி ஓங் வெய் மிங் என்னும் 33 வயது சிங்கப்பூர் ஆடவர் மலேசிய ஆடவருடன் இணைந்து பிறந்தநாள் விருந்து ஒன்றை தமது இல்லத்தில் அளித்தார்.

அந்த விருந்தில் 34 பேர் கலந்துகொண்டனர். சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மறுநாளே ஆடவர்களைக் கைது செய்தனர். அவர்களில் 22 பேர் எக்ஸ்டஸி அல்லது எம்டிஎம்ஏ போதைப்பொருள் உட்கொண்டது அவர்களின் சிறுநீர்ப் பரிசோதனையில் தெரிய வந்தது.

விருந்தை நடத்திய 35 வயது மலேசியர் ஜோனத்தன் கோ வாய் செர்ன் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எட்மண்ட் ஸெக்கரி ஓங் ஒப்புக்கொண்டார்.

போதைப்பொருள் புழங்க வீட்டைப் பயன்படுத்தியது, போதைப்பொருள் உட்கொண்டது, பெருந்தொற்று காலத்தில் வீட்டிற்குள் மற்றவர்களை அனுமதித்தது ஆகியன அந்தக் குற்றச்சாட்டுகள்.

ஜூன் மாதம் மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்போது அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்