தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிடப் பாதுகாப்பை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வீவக

2 mins read
3043be0b-bb96-420c-9c62-81c5b48ba3aa
வேலையிடப் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய வீவக வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானத் தளங்களில் நேரடி காணொளிக் கண்காணிப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அந்தக் காணொளிப் பதிவுகள் ஆராயப்படும். - படம்: வீவக ஓவியம்

வேலையிடப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய வீவக வீடுகளின் கட்டுமானத் தளங்களில் செயற்கை நுண்ணறிவை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50க்கும் அதிகமான புதிய வீவக வீடமைப்புத் திட்டங்களுக்கான கட்டுமானத் தளங்களில் நேரடி காணொளிக் கண்காணிப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும்.

வேலையிடத்தில் பாதுகாப்பற்ற நடைமுறைகள் உள்ளனவா என்பதை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அந்தக் காணொளிப் பதிவுகளை வீவக ஆராயும்.

ஊழியர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அம்சங்கள் இருந்தால் கட்டுமானத் தளத்தின் மேற்பார்வையாளர்களுக்கு அவை குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 22 புதிய வீவக வீடமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் ஏலக்குத்தகை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேலையிடப் பாதுகாப்புக் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்தக் காணொளிக் கண்காணிப்பு அணுகுமுறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று வீவக மே 27ஆம் தேதியன்று தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு 30 வீடமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களும் இந்தப் புதிய அணுகுமுறையைப் கடைப்பிடிக்க வேண்டும்.

மனிதவள அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளின்படி இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக வீவக கூறியது.

ஜூன் 1ஆம் தேதியிலிருந்து $5 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானத் தளங்களில் காணொளிக் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 1ஆம் தேதியிலிருந்து வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதம் $20,000லிருந்து $50,000ஆக உயர்த்தப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல் நடப்பதற்கு முன்பே அவற்றைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பமும் தானியங்கி முறையும் முதலாளிகளுக்கு உதவும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

மே 27ஆம் தேதியன்று அப்பர் சிராங்கூன் சாலையில் உள்ள சிராங்கூன் பலதுறை மருந்தகத்தின் கட்டுமானத் தளத்தை அவர் நேரில் சென்று பார்த்தார்.

குறிப்புச் சொற்கள்