அதிபர் அலுவலகம் முதல்முறையாக நான்கு முழுநேர அதிகாரத்துவ ராணுவ உதவியாளர்களை நியமித்துள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் மூன்று அல்லது அதற்கும் குறைவான முழுநேர அதிகாரத்துவ ராணுவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவ்வாண்டில் அதிகாரத்துவ ராணுவ உதவியாளர்கள், கௌரவ அதிகாரத்துவ ராணுவ உதவியாளர்கள் ஆகியோரின் வேலைப் பளு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அதிபர் மாளிகை தெரிவித்தது.
முழுநேர அதிகாரத்துவ ராணுவ உதவியாளர்களின் நியமன விழாவும் இரவு விருந்துபசரிப்பும் மே 27ஆம் தேதியன்று அதிபர் மாளிகையில் நடைபெற்றது.
விருந்துபசரிப்பில் பேசிய அதிபர் தர்மன் சண்முகரத்னம், அதிபர் மாளிகையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் அங்கு பணிபுரிபவர்கள், குறிப்பாக அதிகாரத்துவ ராணுவ உதவியாளர்களின்றி சாத்தியமன்று என்று பாராட்டினார்.
“அவர்கள் திரைக்கு மறைவில் பணிபுரிபவர்கள். அவர்கள் செய்யும் பணிகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவை குறித்து பலருக்குத் தெரியாது,” என்று அதிபர் தர்மன் கூறினார்.

