டிபிஎஸ் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடவர் கைது

டிபிஎஸ் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடவர் கைது

1 mins read
34c15fd2-881d-44dd-a599-561acf993950
சாங்கி பிஸ்னஸ் பார்க்கில் உள்ள டிபிஎஸ் ஏஷியா ஹப் வளாகத்திலோ மரினா லிங்க் கடைத்தொகுதியில் உள்ள டிபிஎஸ் ஏஷியா சென்ட்ரலிலோ சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

டிபிஎஸ் வங்கித் தலைமையகத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த ஆடவரைக் கைதுசெய்துவிட்டதாகக் காவல்துறை மே 28ஆம் தேதி தெரிவித்தது.

அந்த ஆடவர் மே 27ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

வங்கிப் பிரதிநிதி ஒருவர் மே 27ஆம் தேதி பிற்பகல் 2.10 மணியளவில் தொலைபேசியில் காவல்துறையைத் தொடர்புகொண்டார்.

ஆடவர் ஒருவர் கிட்டத்தட்ட 30 முறை தொலைபேசியில் அழைத்ததாகவும் அவற்றில் சில முறை டிபிஎஸ் வங்கித் தலைமையகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாகச் சொன்னதாகவும் அந்த வங்கி அதிகாரி கூறியதாகக் காவல்துறை தெரிவித்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் 34 வயது ஆடவரைச் சில மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு, அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த ஆடவரால் அவ்வாறு வெடிகுண்டு வைக்க இயலாது என்று தெரியவந்தது.

அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சாங்கி பிஸ்னஸ் பார்க்கில் உள்ள டிபிஎஸ் ஏஷியா ஹப் வளாகத்திலோ மரினா லிங்க் கடைத்தொகுதியில் உள்ள டிபிஎஸ் ஏஷியா சென்ட்ரலிலோ சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் செயல் குறித்துத் தவறான தகவல் தந்ததாக அந்த ஆடவர் மீது மே 29ஆம் தேதி குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ, 50,000 வெள்ளி அபராதமோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்