கல்வியை முடித்த மாணவர்களுக்கும் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக் கட்டணச் சலுகைகளை வழங்குவது குறித்து பொதுப் போக்குவரத்து மன்றம் ஆலோசிக்கவுள்ளது.
ஒரு கல்வி நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்வதற்கு முன்பு வரும் காலம் அல்லது கல்வியை முடித்த பிறகு வேலை கிடைக்கும் வரை காத்திருக்கவேண்டிய காலத்துக்கு இது பொருந்தும். 2024ஆம் ஆண்டுக்கான போக்குவரத்துக் கட்டண பரிசீலனை நடவடிக்கையின் ஓர் அங்கமாக இதுகுறித்து ஆலோசிக்குமாறு பொதுப் போக்குவரத்து மன்றத்தைக் கேட்டுக்கொண்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமையன்று (மே 28) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, உயர்நிலைக் கல்வி முடிந்த பிறகு ஒரு மாதத்துக்குத்தான் மாணவர்கள் சலுகை விலையில் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்த முடியும்; பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேரவுள்ள மாணவர்களுக்கு அந்தக் கால அவகாசம் இரண்டு மாதங்களாகும்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் கல்வி ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும்.
மாணவர்களுக்கான பொதுப் போக்குவரத்துக் கட்டண சலுகைத் திட்டம் நீட்டிக்கப்பட்டால் அது, உயர்நிலைப் பள்ளியிலிருந்து தொழில்நுட்பக் கல்விக் கழகத்துக்குப் போகவுள்ள மாணவர்கள், தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் ஆகியோருக்கும் உதவும் என்று திரு சீ குறிப்பிட்டார்.
“கல்வி முடிந்தவுடன் வேலையில் அமரவிருக்கும் மாணவர்களுக்கும் திட்டத்தை நீட்டிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசிக்கிறோம். அது, வேலையைத் தொடங்குவதற்குக் காத்திருக்கும் காலத்தில் அவர்களுக்குக் கைகொடுக்கலாம்,” என்று திரு சீ குறிப்பிட்டார்.
தற்போதைய பொதுப்போக்குவரத்துக் கட்டண முறையின்கீழ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் போக்குவரத்து அட்டையைக் கொண்டு பேருந்துகளிலும் பெருவிரைவு ரயில்களிலும் 48லிருந்து 70 காசு வரை கட்டணமாகச் செலுத்துகின்றனர். பெரியவர்களுக்கான கட்டணம் 1.09 வெள்ளியிலிருந்து 2.37 வெள்ளிக்கு இடைப்பட்டிருக்கும்.
உயர்நிலைப் பள்ளி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், பேருந்து, பெருவிரைவு ரயில்களில் பயன்படுத்தக்கூடிய மாதாந்திரப் போக்குவரத்து சலுகை அட்டைகளை 49 வெள்ளிக்கு வாங்கலாம். பெரியவர்களுக்கான அத்தகைய அட்டையின் விலை 128 வெள்ளியாகும்.

