தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடன்முதலை தொந்தரவு விவகாரம்: பங்ளாதேஷ் ஊழியர் சிங்கப்பூரைவிட்டு வெளியேறுகிறார்

2 mins read
162c2e42-9002-481a-a2b4-edd958cc54d5
பங்ளாதேஷ் ஊழியர் முகம்மது ஷரிஃப் உதின். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம் கடன் முதலையால் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கூறிய பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் வெள்ளிக்கிழமை (மே 31) சிங்கப்பூரை விட்டு வெளியேறுகிறார்.

முகம்மது ஷரிஃப் உதின் என்படும் அந்த ஊழியரின் புகார் மீது விசாரணை நடத்திய அதிகாரிகளால் அவருக்குத் தொல்லை தந்ததாகக் கூறப்படுபவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

விசாரணை முடிவுற்ற நிலையில் தமது சொந்த நாட்டுக்குத் தாம் திருப்பி அனுப்பப்படுவதாக மே 25ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றிய காணொளியில் அவர் கூறியிருந்தார்.

விசாரணை முடிந்த பின்னரும் சிங்கப்பூரில் தொடர்ந்து வேலை செய்யலாம் என்று அதிகாரிகள் இதற்கு முன்னர் தம்மிடம் கூறி இருந்ததாகவும் அந்தப் பதிவில் ஷரிஃப் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (மே 28) சிங்கப்பூர் காவல்துறையும் மனிதவள அமைச்சும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

காவல்துறை நடத்திய விசாரணை முடிவடைந்துவிட்டதால் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஷரிஃப்பிடம் மே 23ஆம் தேதி தெரிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“கடனைக் கேட்டு தொந்தரவு தந்ததாகக் கூறப்பட்டவரின் நோக்கத்தையும் அடையாளத்தையும் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ஆதாரம் மீதான தடயவியல் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

“ஷரிஃப் கடன் வாங்கியதற்கான ஆதாரம் எதனையும் காவல்துறை கண்டறியவில்லை.

“தொந்தரவு தந்ததாகச் சொல்லப்பட்டவரை அடையாளம் காணபதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டன,” என்று கூட்டறிக்கை தெரிவித்தது.

சட்டவிரோதக் கடன்முதலைகள் தம்மைத் தொந்தரவு செய்வதாகவும் அவர்களைப் பற்றி காவல்துறையிடம் புகார் தெரிவிக்குமாறு தமது முதலாளியிடம் கூறியதைத் தொடர்ந்து தாம் வேலை இழந்துவிட்டதாக ஏப்ரல் மாதம் அந்த 46 வயது ஊழியர் காணொளிப் பதிவை வெளியிட்டு இருந்தார்.

வெளிநாட்டு ஊழியர் நல்வாழ்வுக் குழுக்களுக்கான சமூக ஊடகத்தளத்தில் அந்தக் காணொளி வெளியாகி இருந்தது.

ஷரிஃப் தெரிவித்த புகார் மீது விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறையும் மனிதவள அமைச்சும் அப்போது கூறி இருந்தன.

குறிப்புச் சொற்கள்