தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவா சூ காங் நச்சு வாயுச் சம்பவம்: பாதிக்கப்பட்ட இரண்டாவது ஊழியர் மரணம்

1 mins read
c4c24f5d-3835-4569-b492-35c2ddda75a5
சுவா சூ காங்கில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர்நிலையம். - படம்: பொதுப் பயனீட்டுக் கழகம்

சுவா சூ காங்கில் அமைந்துள்ள பொதுப் பயனீட்டுக் கழக நீர் நிலையத்தில் மே 23ஆம் தேதி ஏற்பட்ட நச்சு வாயுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாவது ஊழியர் செவ்வாய்க்கிழமை (மே 28) இரவு உயிரிழந்தார்.

அந்த 24 வயது மலேசியர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர், கழகத்தின் துணைக் குத்தகைதாரரான ‘ஸ்டார்குரூப் எஸ்ட்’ நிறுவனத்தின் ஊழியர் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் புதன்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, நீர்நிலையத்தின் தொட்டி ஒன்றைச் சுத்தம் செய்தபோது ஹைட்ரஜன் சல்ஃபைடு நச்சு வாயுவைச் சுவாசிக்க நேரிட்டதால் மூன்று ஊழியர்கள் மயக்கமடைந்தனர். மூவரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான 40 வயது இந்திய நாட்டு ஆடவர் மே 23ஆம் தேதியே மாண்டார்.

மலேசியர்களான மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 24 வயது மலேசியர் மே 28ஆம் தேதி இரவு 10 மணியளவில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்றோர் ஊழியரான 39 வயது மலேசியர், செவ்வாய்க்கிழமை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது.

மாண்ட ஊழியரின் குடும்பத்தினர்க்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்