முகத்தில் குத்தப்பட்டு பலமாகத் தாக்கப்பட்ட ஆர். தேவன், 34, தலையில் ஏற்பட்ட காயங்களால் சனிக்கிழமையன்று (மே 25ஆம் தேதி) உயிரிழந்தார்.
279 பாலஸ்டியர் ரோட்டில் மே 18ஆம் தேதி, தேவனுக்கும் 25 வயது முகம்மது அமிருடினுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் விளைவாக அந்த மரணம் நேர்ந்தது.
‘சில் அப் பிஸ்ட்ரோ பார்’ என்ற கேளிக்கைக் கூடத்திற்கு வெளியே தாக்கப்பட்ட திரு தேவன், கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஃபாஜார் ரோட்டில் புளோக் 419ன் கீழ்த்தளத்தில் தேவனின் இறுதிச் சடங்குகள் மே 28ஆம் தேதி பிற்பகல் நடந்த பிறகு அவரது நல்லுடல் மண்டாய் தகனச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திரு தேவனின் குடும்பத்தில் பெற்றோர், அண்ணன், அக்கா ஆகியோர் உள்ளனர்.
திரு தேவனின் குடும்பத்தினர் தமிழ் முரசிடம் பேச மறுத்து விட்டனர். இருந்தபோதும் அவருக்குத் தெரிந்தவர்கள், திரு தேவன் பழகுவதற்கு இனிமையானவர் என்று கூறினர்.
“திரு தேவன் என் சிறு வயது நண்பர். பிறருக்கு எப்போதும் உதவி செய்யக்கூடியவர்,” என்று தளவாடப் பணியாளர் திரு சசி, 35, கூறினார்.
திரு தேவன் பழகுவதற்கு இனிமையானவர் என்றும் பிறருக்கு உதவி செய்பவர் என்றும் குடும்ப நண்பர் அ.கலை, 60, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கவலைக்கிடமான காயத்தை வேண்டுமென்றே விளைவித்ததன் பேரில் அமிருடின் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமிருடினுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் அவருக்குப் பிரம்படியும் விதிக்கப்படலாம்.