செயற்கை நுண்ணறிவுத் திறன்களை பயன்படுத்துவதில் சிங்கப்பூரில் உள்ள ஏறத்தாழ 50,000 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உதவி பெற உள்ளன.
செயற்கை நுண்ணறிவு அம்சங்களுக்கு முன்கூட்டி ஒப்புதல் பெறுவதற்கு ஆகும் செலவு உள்ளிட்ட தொழில்நுட்பச் செலவுகளில் 70 விழுக்காடு வரை அரசாங்கம் அந்த நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கும்.
புதிதாகத் தொடங்கப்பட்ட மின்னிலக்க நிறுவனத் திட்டத்தின்கீழ் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அந்த உதவி கிட்டும்.
சிங்கப்பூரின் மின்னிலக்கமய திட்டங்களை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியாக அந்தப் புதிய திட்டம் வகுக்கப்பட்டது.
புதன்கிழமை (மே 29) நடைபெற்ற வருடாந்திர ஆசிய தொழில்நுட்பக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், இதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை அறிவித்தார்.
“அப்போது அவர் குறிப்பிடுகையில், கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் வர்த்தக முதலாளிகள் ஆகிவிட்ட இளம் தலைமுறையினர் தங்களது வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
“இருப்பினும் அதனை எங்கிருந்து தொடங்குவது என்பது அவர்கள் எதிர்நோக்கும் சவால்,” என்றார் திரு டான்.
தற்போதைய சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்னிலக்க நடவடிக்கையின் (கோ டிஜிட்டல்) கீழ் செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களுக்கான முதற்கட்ட அனுமதியை அந்நிறுவனங்கள் பெற முடியும்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, எல்லா தொழிற்கூட மின்னிலக்கத் திட்டங்களும் புதுப்பிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவுத் திறன் திட்டங்களுடன் இணைக்கப்படும்.
இதற்கிடையே, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், தொடர்பு, தகவல் அமைச்சு, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஆகியன இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
சிறிய, நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் ஏறக்குறைய முன் அனுமதி பெற்ற 400 மின்னிலக்கத் தீர்வுகளுக்கான பட்டியல் உள்ளதாகவும் அவற்றில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு செயற்கை நுண்ணறிவுத் திறன்களை ஏற்கெனவே பெற்றுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.
தற்போது நடப்பில் உள்ள எல்லா தொழில்நுட்பத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டம் உள்ளடக்குகிறது. கிட்டத்தட்ட 15,000 செயற்கை நுண்ணறிவுப் பயற்றுநர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தற்போதைய திட்டமும் அதில் ஒருங்கிணைக்கப்படுகிறது.