வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளை வாங்க விரும்புபவர்கள் இனி வீவக வீடுகள் இணையவாசலுக்குச் சென்று விற்பனைக்கு விடப்படும் வீடுகளைத் தேடலாம். அத்துடன் விற்பனைக்கு விடப்படும் வீட்டை நேரில் சென்று பார்க்க வீட்டின் உரிமையாளர் அல்லது சொத்து முகவர்களுடன் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யலாம்.
விற்பனைக்கு விடப்படும் வீவக மறுவிற்பனை வீடுகளை நேரடியாகப் பட்டியலிடும் இச்சேவை மே 30ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்தச் சேவையைப் பயன்படுத்தி வீட்டு உரிமையாளர்கள் அல்லது சொத்து முகவர்கள் விற்பனைக்கு விடப்படும் வீடுகளை நேரடியாகப் பட்டியலில் சேர்க்கலாம்.
மே 13ஆம் தேதியன்று முன்னோட்டத் திட்டமாக இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுவரை 600க்கும் மேற்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்தது.
வீவக வீடுகளைப் பொறுத்தவரை வீட்டை விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் சொத்து முகவர்களுக்கும் வெளிப்படையான, நம்பகமான தளமாகத் திகழ புதிய சேவை இலக்கு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வீடு வாங்க விரும்புவோர், வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்குவதற்கான தகுதிக் கடிதம் (எச்எஃப்இ) இருந்தால் மட்டுமே வீட்டை விற்பவர்களுடன் அவர்கள் தொடர்புகொண்டு வீட்டை நேரில் பார்ப்பதற்கான நேரத்தை முடிவுசெய்ய முடியும்.
பட்டியலிடப்படும் வீடுகள் இருக்கும் வட்டாரத்தில் கடந்த ஆறு மாதங்களில் விற்கப்பட்ட வீடுகளின் விலை கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் ஆக அதிகமாகப் பதிவான விலையைவிட வீட்டை விற்பவர்கள் கேட்கும் விலை, 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தால் விற்பனையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் அம்சம் இணையவாசலில் இருப்பதாக வீவக தெரிவித்தது.

