நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்போரும் நோய்கள், பராமரிப்பு, சுகாதாரக் கட்டமைப்புடன் இணைந்து செயலாற்றுவது போன்ற அனுபவங்களிலிருந்து ஏராளமாகக் கற்று, பிறருக்கு வழிகாட்டும் திறன்களைக் கொண்டுள்ளதாக தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
நடைமுறை அறிவும் நுண்ணறிவும் ஆழமாகப் பெற்றுள்ள இவர்கள், ‘ஸ்பென்’ எனப்படும் சிங்ஹெல்த்தின் நோயாளிகளுக்கான குரல்கொடுக்கும் கட்டமைப்பைச் சேர்ந்திருப்பது குறித்து நன்றியுணர்வுடன் இருப்பதாகவும் டாக்டர் புதுச்சேரி, தம் உரையில் கூறினார்.
சிங்கப்பூரின் ஊக்கமூட்டும் நோயாளி மற்றும் சுகாதாரப் பராமரிப்பாளர் விருது நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் புதுச்சேரி, 56 பேருக்கு விருதுகளை வழங்கினார். சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை (மே 29) நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், பரிசு வழங்கும் அங்கத்துடன் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
“விருதுபெறும் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்திலிருந்தும் அசையா மனஉறுதியும் தைரியமும் தென்படுகின்றன. நோயாளிகளும் அவர்களின் அன்புக்குரியோருக்கும் சிறந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்த விருது பெற்றவர்கள் மற்றவர்களுக்கு உந்துதலை அளித்து வருகின்றனர்,” என்றார் டாக்டர் புதுச்சேரி.
இத்தகையோரால் சிங்கப்பூரில் நோயாளிகளின் நலனுக்காகக் குரல்கொடுக்கும் பண்பாடும் வளர்ந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
விருது வாங்கியவர்களில் ஒருவரான மாலதி நாகரத்தினம், 38, தனக்குக் கிடைத்த விருது மகிழ்ச்சி, முனைப்பு ஆகியவற்றை தருவதாகக் கூறினார்.
“நீரிழிவு கொண்ட என்னாலும் பிறரைப் போல வாழ முடியும் என்பதை என் வெற்றி எடுத்துக்காட்டுகிறது. நீரிழிவு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு உயிரிழந்த என் தாயார் என்னை நினைத்துப் பெருமைப்படுவார் என்றும் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

