குறையற்ற செயற்கை நுண்ணறிவு சாத்தியமில்லை என்றும் ‘இன்னொரு சிறந்த தெரிவு’ தேவை என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகளை அதிகரித்து தீமைகளைக் குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்து அபாயங்களையும் தவிர்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் புத்தாக்கம் இல்லாமல் போய்விடும் என்று ஏஷியா டெக் எக்ஸ் சிங்கப்பூர் மாநாட்டின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் மற்றும் உலகத் தலைவர்களிடம் அதிபர் தர்மன் மே 29ஆம் தேதியன்று பேசியபோது தெரிவித்தார்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாட்டைத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. மாநாடு மே 29லிருந்து மே 31 வரை நடைபெறுகிறது.
மாநாட்டில் அனைத்துலகத் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,000 நிபுணர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, நீடித்த நிலைத்தன்மை போன்ற விவகாரங்கள் குறித்து மாநாட்டில் கலந்துரையாடப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பாகப் பொருளியல், சமூக ரீதியிலான கவலைகள் குறித்து அதிபர் தர்மன் பேசினார். கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள ‘ஃபிளவர் ஃபீல்ட் ஹால்’ மண்டபத்தில் அவர் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்து போய்விட்டதாக அதிபர் தர்மன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்றார் அவர்.
அவ்வாறு நேர்ந்தால் செயற்கை நுண்ணறிவுத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவிடும் என்று அவர் எச்சரித்தார். அதன் விளைவாக வேலை இழப்பு, சமுதாய அடிப்படையிலான அவநம்பிக்கை, போர் ஆகியவை தலைவிரித்தாடக்கூடும் என்றார் அவர்.
ஆனால் ஆபத்துகளுக்குப் பயந்து, செயற்கை நுண்ணறிவுக்கு விலங்கு மாட்டிக் கட்டுப்படுத்தினால் அதன்மூலம் கிடைக்கக்கூடிய பல நன்மைகள் கிடைக்காமல் போய்விடும் என்றும் அதிபர் தர்மன் தெரிவித்தார்.
எனவே, செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதுதான் மற்றொரு சிறந்த தெரிவாகும் என்று அதிபர் தர்மன் கூறினார்.