சக்திவாய்ந்த அடுத்த தலைமுறை கதிராய்வியல் கணினி மையமாக சிங்கப்பூரை உருவாக்க இன்னும் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட $300 மில்லியன் கூடுதல் முதலீடு செய்யப்படவுள்ளது.
முனைவர் ஆய்வுப் படிப்பு, முதுநிலைப் படிப்புகளில் தலா 100 உள்ளூர் நிபுணர்களை உருவாக்குதல், உள்நாட்டில் கதிராய்வியல் கணினிகள், உபகரணங்களை உருவாக்குவதற்கான ஆய்வு முயற்சிகளுக்கான மானியம் உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தொகை செலவிடப்படும்.
கடந்த 2002ஆம் ஆண்டில் தேசிய ஆய்வு அறநிறுவனம் தனது முதல் முதலீட்டை மேற்கொண்டதிலிருந்து, கதிராய்வியல் தொழில்நுட்பத்தில் இதுவரையில் செய்யப்பட்டுள்ள $400 மில்லியன் ஆய்வு மேம்பாட்டு நிதியுடன் கூடுதலாக இந்த $295 மில்லியன் வழங்கப்படுகிறது.
கெபெல்லா சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியா டெக் எக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கதிராய்வியல் துறைக்கான முதலீடு, திட்டங்களை வியாழக்கிழமை (மே 30) அறிவித்தார்.
மே 29 முதல் 31 வரை நடைபெறும் அந்த மாநாட்டில் உலகளாவிய தொழில்நுட்பத் துறையினர், மின்னிலக்கமயமாதல் குறித்த உரைகள், கலந்துரையாடல்களில் பங்கேற்கின்றனர்.
கதிராய்வியல் கணினிகள் ஒளி அல்லது அணுக்களின் பண்புகளைப் பயன்படுத்தி பாரம்பரிய கணினிகளுக்கு மிகவும் சிக்கலானவற்றைத் தீர்க்க முடியும். மருத்துவம், பொருள்கள், சிறந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகியவற்றில் புதிய முன்னேற்றங்களுக்கும் அவை வழிவகுக்கும்.
தேசிய கதிராய்வியல் உத்தி குறித்து அறிவித்த துணைப் பிரதமர் ஹெங், கொவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது ஏற்பட்ட மின்னிலக்கமயமாக்கல், இன்றைய செயற்கை நுண்ணறிவு போலவே, கதிராய்வியல் தொழில்நுட்பமும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடுத்த அலையாக உறுதி அளிக்கிறது என்று கூறினார்.
மருந்து கண்டுபிடிப்பு, மேம்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு போன்ற பல துறைகளை முன்னெடுத்துச் செல்லும் உயர் செயலாக்க ஆற்றல்களை வழங்க இந்தத் தொழில்நுட்பம் முனைகிறது என்றார் திரு ஹெங்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த 30 ஆண்டுகளில் கதிராய்வியல் துறை உலகளவில் $600 பில்லியன் முதல் $1.1 டிரில்லியன் வரையிலான பொருளியல் மதிப்பை உருவாக்கும் என்று பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஐபிஎம், கூகல், சீனா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஒரு கதிராய்வியல் கணினிக்கான போட்டியில் முன்னேறியுள்ளனர். ஆனால் இன்னும் சந்தைக்கு வெளிவரவில்லை.
சிங்கப்பூர் கதிராய்வியல் உத்திபூர்வத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2025 திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட $295 மில்லியன் நான்கு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும். அவை, அறிவியல் ஆய்வுகள், திறன்கள், தொழில்முனைப்பு, பொறியியல் ஆற்றல்கள் என்று தேசிய கதிராய்வியல் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வணிகத் திட்டங்கள் முதல் கல்வி நிறுவனங்கள் வரை கதிராய்வியல் கணினி அமைப்பை மேற்பார்வையிடும் தேசியத் திட்டங்களை இந்த அலுவலகம் வழிநடத்தும்.
சிங்கப்பூர் உலகளவில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய அதன் சொந்த கதிராய்வியல் செயலிகளை உருவாக்குவது அதன் முன்னுரிமைகளில் ஒன்றாகும்.