பங்ளாதேஷைச் சேர்ந்த ஊழியர் முகமது ஷரிஃப் உதினின் சிறப்பு அனுமதியை நீட்டிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறினர்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் அதன் தொடர்பில் மேல்முறையீடு செய்ததாகக் கூறப்பட்டது.
ஷரிஃபின் சிறப்பு அனுமதி, மே 24ஆம் தேதியுடன் காலாவதியாகவிருந்தது.
இருப்பினும் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற ஏற்பாடு செய்வதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் கோரியதால் மே 27ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது. பின்னர் அவரது வழக்கின் சூழல் கருதி மே 31ஆம் தேதி வரை அதிகாரிகள் அதை மேலும் நீட்டித்தனர்.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் மனிதவள அமைச்சும் மே 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஷரிஃப் தொடர்பான மேல்முறையீட்டைக் கவனமாகப் பரிசீலித்ததாகவும் அதன் பிறகு அவரது சிறப்பு வேலை அனுமதியை நீட்டிக்க வேண்டாமென முடிவெடுத்ததாகவும் தெரிவித்தன.
மே 31ஆம் தேதி, ஷரிஃப் தான் சிங்கப்பூரை விட்டுக் கிளம்புவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். தானும் நண்பர்களும் விமான நிலையத்தில் இருக்கும் படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.
‘கடன் முதலை’களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து ஷரிஃபின் முதலாளி ஏப்ரல் 11ஆம் தேதி அவரை வேலையிலிருந்து நீக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை இதுகுறித்து விசாரித்ததால் அவருக்குச் சிங்கப்பூரில் தங்கியிருக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
விசாரணை முடிவடைந்ததாகக் கூறிய அதிகாரிகள் ஷரிஃபைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபரைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறினர்.
கடன் முதலைகளிடம் ஷரிஃப் கடன் வாங்கியதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் தனது வழக்கின் தொடர்பில் முறையீட்டுக் கடிதம் எழுதியிருப்பதாக ஷரிஃப் மே 30ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு முந்தைய நாள், ஷரிஃபின் சார்பாக அவரது நண்பர்கள் இருவர் பிரதமரின் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது பிரதமர் வோங்கைச் சந்தித்தனர்.
ஏப்ரல் 11ஆம் தேதி வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, காவல்துறை விசாரணை நடைபெற்ற வேளையில், தற்காலிக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை தேடிக்கொள்ள ஷரிஃபிற்குப் போதிய அவகாசம் அளிக்கப்பட்டதாக ஆணையமும் அமைச்சும் குறிப்பிட்டன.
அவரது வேலை தேடும் நடவடிக்கையில் மனிதவள அமைச்சும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையமும் வேலைவாய்ப்பு முகவைகளுடன் ஷரிஃபைத் தொடர்புகொள்ளச் செய்து உதவின. ஆயினும் அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிகப் பணிகளை ஷரிஃப் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஷரிஃப் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருக்க ஆதரவு தெரிவித்து 760க்கு மேற்பட்டோர் இணைய மனு ஒன்றில் கையெழுத்திட்டனர்.
புனைவு அல்லாதவை பிரிவில் சிங்கப்பூர் புத்தகப் பரிசை வென்ற முதல் வெளிநாட்டு ஊழியர் என்ற சிறப்பைப் பெற்றவர் ஷரிஃப்.
சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தவர் என்று அவர் கருதப்படுகிறார்.