அதிகம் பேர் பலனடைய மனநல மறுவாழ்வு இல்லம் புதுப்பிப்பு

அதிகம் பேர் பலனடைய மனநல மறுவாழ்வு இல்லம் புதுப்பிப்பு

2 mins read
ec2b0bb9-4526-428d-97bd-aacf465774af
புளோக் 240 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5ல் புதுப்பிக்கப்பட்டு உள்ள சிங்கப்பூர் மனநலச் சங்க இல்லத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் பார்வையிட்டார். - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

மனநலப் பிரச்சினைகளுடன் வாழ்வது என்பது ஒரேயடியாகத் தனிமைக்கு இட்டுச் செல்லக்கூடியது என்றும் அதனை நமது சமூகம் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.

மனநலப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அவர்கள் வாழ உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

புதுப்பிக்கப்பட்ட மனநல மறுவாழ்வு இல்லத் திறப்பு நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (மே 31) கலந்துகொண்டு திரு தர்மன் உரையாற்றினார். சிங்கப்பூர் மனநலச் சங்கம் அந்த இல்லத்தை நடத்துகிறது.

“ஒரு சமூக அமைப்பாக இருந்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்ப உதவுவது என்பது ஆற்றல்மிக்க செயல்.

“மன அழுத்தம், சித்தபிரம்மை போன்ற மனநலப் பிரச்சினைகளில் சிக்கியோர் மீண்டுவந்து சமூகத்துடன் மறுபடியும் ஒருங்கிணைய உதவும் அதுபோன்ற சமூக அமைப்புகளில் இந்த இல்லமும் ஒன்று,” என்றார் அதிபர்.

சிங்கப்பூர் மனநலச் சங்கக் குழுமம் நடத்தும் இல்லங்கள் புக்கிட் பாத்தோக் குடியிருப்புப் பேட்டையில் அமைந்து உள்ளன.

பாதிப்பில் இருந்து மீண்டுவருவோர் வீடமைப்புக் கழகக் குடியிருப்பு சமூகத்துடன் வழக்கநிலைக்குத் திரும்ப உதவும் வகையில் அந்த இல்லங்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன.

வீவக புளோக்கின் கீழ்த்தளத்தில் ஐந்து வீடமைப்புப் பகுதிகளாக அந்த இல்லங்கள் அமைந்துள்ளன. ஒவ்வோர் இல்லத்திலும் ஒன்பது முதல் 11 பேர் வரை இருப்பார்கள். சமையலறை, கழிவறை, வரவேற்பு அறை ஆகியன அவற்றில் இருக்கும்.

இல்லத்தில் இருப்போர் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை.

படுக்கை அறைகள் அங்கு இருக்காது. தங்கும் இல்லங்களில் இருப்பதைப்போல படுக்கைகள் வரிசையாக அமைக்கப்பட்டு இருக்கும்.

வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப அந்த இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. முதற்கட்ட புதுப்பிப்புப் பணிகள் ஜனவரி மாதம் நிறைவுபெற்றன.

தற்போது அந்த இல்லங்களில் 51 படுக்கைகள் உள்ளன. இதற்கு முன்னர் 36 படுக்கைகள் மட்டுமே இருந்தன.

குறிப்புச் சொற்கள்