2024ஆம் ஆண்டிற்கான ‘பசுமையாவோம் எஸ்ஜி’ (Go Green SG) இயக்கத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஜூன் மாதம் 12ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு வழிநடத்தி ஒருங்கிணைக்கும் இந்த தேசிய அளவிலான ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கம் தொடர்பில், பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த பரவலான நடவடிக்கைகள், எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான இந்த இயக்கம் வழங்கவிருக்கும் பசுமை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான இணையவழி பதிவு, வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது.
விரைவில் தொடக்கம் காணவுள்ள தேசிய அளவிலான ‘பசுமையாவோம் எஸ்ஜி 2024’ இயக்கத்தின் ஓர் அங்கமாக கடற்கரை தூய்மையாக்கம், பிளாஸ்டிக் (நெகிழி) பொருள்கள் மறுபயனீட்டை விவரிக்கும் பயிலரங்குகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுச் சேவைகள் சார்ந்த பணிகளில் நிலைத்தன்மை சார்ந்த அம்சங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்த பின்னணி விவரங்களை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்கு, பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர் நடுவம் உள்ளிட்ட இடங்களைப் பார்ப்பதற்கான சுற்றுலா உட்பட, பல்வேறு அங்கங்கள் இந்த ஆண்டிற்கான ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கம் சார்ந்த நிகழ்வுகளில் இடம்பிடித்துள்ளன.
பள்ளி வேளையிலும், அதற்கு அப்பாற்பட்ட நாள்களிலும் பொதுமக்கள் நீக்குப்போக்கான வகையில் பங்கேற்பதற்கு ஏற்றவகையில் இந்த ஆண்டு, ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கம், ஜூன் 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
‘பசுமையாவோம் எஸ்ஜி 2024’ இயக்கத்தில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்துகொள்ள, பொதுமக்கள் மே 31ஆம் தேதி முதல் www.gogreen.gov.sg எனும் இணையப்பக்கத்தைப் பார்வையிடலாம்.
மேலும் மேற்கூறிய இயக்கத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான பதிவுகளைச் செய்ய விரும்புவோர் உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதிமுதல் பதிவுகளை மேற்கொள்ள இயலும்.
தொடர்புடைய செய்திகள்
அதிகளவிலான சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மீள்திறன் கொண்ட கூட்டு முயற்சியை நோக்கி சிங்கப்பூரர்கள், அமைப்புகள் மற்றும் சமூகத்தை அணி திரட்டுவது தேசிய அளவிலான ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கத்தின் இலக்கு.

