இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடி: 5 மாதங்களில் $1 மில்லியன் இழப்பு

இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடி: 5 மாதங்களில் $1 மில்லியன் இழப்பு

2 mins read
2,000 பேர் பாதிக்கப்பட்டனர்
a941fca3-a763-4f3f-8801-ee2b6e3ce49a
பெரும்பாலான நுழைவுச்சீட்டு மோசடிச் சம்பவங்கள் டெய்லர் சுவிஃப்டின் இசை நிகழ்ச்சியுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கடந்த ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட 2,000 பேர் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடிகளால் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் மொத்தம் $1 மில்லியனை இவ்வாறு இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நுழைவுச்சீட்டு மோசடிச் சம்பவங்கள் டெய்லர் சுவிஃப்டின் இசை நிகழ்ச்சியுடன் தொடர்புடையவை என்று காவல்துறை கூறியது. இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடி நிலவரம் குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு அது பதிலளித்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற புரூனோ மார்ஸ், எட் ஷீரன், கோல்ட்பிளே இசை நிகழ்ச்சிகள் தொடர்பிலும் இத்தகைய மோசடிகள் நடந்ததாகக் காவல்துறை கூறியது.

இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள் தொடர்பான மோசடி விளம்பரங்களை அகற்றுவதன் தொடர்பில் சமூக ஊடகங்கள், மின்வர்த்தகத் தளங்கள் ஆகியவற்றுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக அது குறிப்பிட்டது.

மோசடியில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்படும் கணக்குகளை உடனடியாக முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை, டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு விற்பனையைக் கேரோசல் தளம் தடை செய்தது. பயனாளர்கள் மோசடிக்கு ஆளாவதைத் தடுப்பது இதன் நோக்கம்.

ஜனவரி 1 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை ஏறக்குறைய 1,551 பேர் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு தொடர்பான மின்வர்த்தகத் தள மோசடியில் 737,000 வெள்ளியை இழந்ததாகக் காவல்துறை கூறியது.

அக்டோபரில் அமெரிக்க பாப் இசைக்கலைஞர் ஒலிவியா ரோட்ரிகோவின் இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் மே மாத நிலவரப்படி, மோசடியில் இழக்கப்பட்ட தொகை 1 மில்லியன் வெள்ளி என்று அது குறிப்பிட்டது.

இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்