தனியார் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு நிறுவனமான ‘கார்ட்லைஃப்’ வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 157 பெற்றோரின் பிள்ளைகளின் தொப்புள்கொடி ரத்த அலகுகளைச் சரியாகப் பராமரிக்காததால் பாழாயின.
இதனால், அதிருப்தியடைந்துள்ள கார்ட்லைஃப்பின் மற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் பிள்ளைகளின் தொப்புள்கொடி ரத்தத்தை மற்ற மூன்று தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமிக்கும் வசதிகள் கொண்ட ரத்த வங்கிகளுக்கு மாற்ற விரும்பினால் மாற்றிகொள்ளலாம்.
அவற்றைச் சேமித்துவைக்க மற்ற ரத்த வங்கிகள் தயாராக இருக்கும்வேளையில், இந்தப் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பெற்றோர் ஆயிரக்கணக்கான வெள்ளிகளைச் செலவழிக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்பட்டது.
இந்தச் செலவில் பரிமாற்ற கட்டணம், போக்குவரத்துச் செலவுகள், சேமிப்புக் கட்டணம் மற்றும் புதிய வசதிக்குத் தேவைப்படும் கூடுதல் சோதனைகள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவை எல்லாவற்றிற்கும் மேல் தளவாட சிக்கலையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்படுகின்றனர்.
இத்தனை இடையூறுகள் இருந்தபோதிலும், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தொப்புள்கொடி ரத்தத்தை வேறு வங்கிக்கு மாற்றுவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.