கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களோடு ஒப்பிடும் போது இவ்வாண்டு அதே காலக்கட்டத்தில் நடந்த வயதான பாதசாரிகள் தொடர்புடைய போக்குவரத்து விபத்துகள் குறைந்தன எனச் சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்கும் ஏப்ரல் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 67, வயது மூத்த பாதசாரிகள் தொடர்புடைய போக்குவரத்து சம்பவங்கள் பதிவானதாகவும் இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு 86 சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்பட்டது.
இவ்வாண்டின் முற்பகுதியில் நடந்த சம்பவங்கள் குறைவு என்றாலும் பாதசாரிகளையும் வாகனமோட்டிகளையும் விழிப்புடன் இருக்கும்படி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தோ பாயோவில் சனிக்கிழமையன்று (ஜூன் 1) நடந்த சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மாதம் 2024 நிகழ்ச்சியில் இந்தத் தகவல்களைப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.
மேலும், சென்ற ஆண்டின் முற்பகுதியில் சாலை விபத்துகளில் மாண்ட வயதான பாதசாரிகளின் எண்ணிக்கை 8ஆக இருந்தன என்றும் இவ்வாண்டு அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 7ஆக குறைந்துள்ளது என்றும் அது கூறியது.
இவ்வாண்டின் முற்பகுதியில் பதிவான வயதான பாதசாரிகள் தொடர்புடைய 59 சம்பவங்களில் மூத்தோர் காயமடைந்தனர். இதே காலக்கட்டத்தில் சென்ற ஆண்டு 77 சம்பவங்களில் மூத்தோர் காயமடைந்தனர்.
“கடந்த சில மாதங்களில், பல மோசமான சாலை விபத்துக்களை நாம் கண்டோம். அவை நமது சமூகத்திற்கு இழப்பையும் மனவேதனையையும் அளித்துள்ளன,” என நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.
“இந்தச் சம்பவங்கள் நம் சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான பணி தற்போது மிகவும் முக்கியமானது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன,” என அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“உள்கட்டமைப்பு மேம்பாடுகள், அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவை மிகவும் முக்கியமானவை என்றாலும், அவை மட்டும் நம் சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் போதாது,” என்றார் அமைச்சர் ஏமி.
சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரும் சாலை பாதுகாப்பு கலாச்சாரத்தையும் கருணையையும் வளர்த்துக்கொள்ள கால அவகாசம் தேவை என்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு அவர்கள் செயல்பட வேண்டும் என்றும் திருவாட்டு ஏமி தெரிவித்தார்.

