துடிப்புமிக்க மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் (ஈஸ் திட்டம்) 2012ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் திட்டத்தால் இதுவரை 293,000 குடும்பங்கள் பலனடைந்துள்ளன.
வீவக வீடுகளில் கைப்பிடிகள், சரிவுமேடைகள் போன்ற மூத்தோருக்கு ஏற்புடைய, தேவையான அமசங்களைப் பொருத்த இத்திட்டம் விலைக்கழிவு வழங்குகிறது.
வீடுகளுக்குள் மூத்தோரின் நடமாட்டம், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் இலக்கு.
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் (ஈஸ் 2.0), வீடுகளில் பொருத்தப்படும் அம்சங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 11ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அம்சங்களில் மடக்கக்கூடிய குளியல் இருக்கைகள், நீரைப் பீய்ச்சியடிக்கும் கருவிகள், கீழிறக்கிப் பொருத்தப்படும் கழிவறை வாசல் கைப்பிடிகள் ஆகியவை அடங்கும்.
ஈஸ் 2.0 திட்டத்தின்கீழ் பொருத்தப்படும் அம்சங்களுக்காக 11,000க்கும் அதிகமான குடும்பங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. இது சராசரி மாதாந்தர விண்ணப்பத்தைவிட ஐந்து மடங்கிற்கும் அதிகம்.
ஜூன் 2ஆம் தேதியன்று புக்கிட் பாத்தோக் மண்டலம் 9ல் நடைபெற்ற குடியிருப்பாளர் விழாவில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் இத்தகவலை வெளியிட்டார்.
“ஈஸ் 2.0 திட்டத்தின்கீழ் கட்டப்படும் அம்சங்களுக்கான தேவையும் அதன் மீது குடியிருப்பாளர்கள் கொண்டுள்ள ஆர்வமும் அதிகம். அதிகமான குடும்பங்கள் விண்ணப்பம் செய்துள்ளதால் விண்ணப்பங்களை செயல்படுத்த வீவகவுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். இந்த மேம்பாட்டுப் பணிகள் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் முக்கியம் என்று எங்களுக்குத் தெரியும். எனவே, வீவக முடிந்த அளவு விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்தும்,” என்று திருவாட்டி சிம் கூறினார்.

