சிங்கப்பூரில் பதிவான $3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்ட மேலும் மூன்று ஆடவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஜூன் 2ஆம் தேதியன்று தெரிவித்தது.
அவர்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த பிறகு, உடனடியாக நாடு கடத்தப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
“மூவரும் சிறையிலிருந்து நேரடியாக விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீடு திரும்பி தங்கள் உடைமைகளை எடுக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை,” என்று ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
சிங்கப்பூரின் சோதனைச்சாவடிகளில் ‘மல்ட்டி மோடல் பயோமெட்ரிக்ஸ் ஸ்கேனிங்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் நாடு கடத்தப்படுவோர் வேறு கடப்பிதழ், அடையாளத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் வர முயன்றால் உடனடியாகத் தெரிந்துவிடும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
கம்போடியரான 42 வயது சூ பாவ்லின், சைப்பரஸ் நாட்டைச் சேர்ந்த 41 வயது சூ ஹாய்ஜின் ஆகியோர் முறையே மே 25, மே 28ஆம் தேதிகளில் கம்போடியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
துருக்கியைச் சேர்ந்த 43 வயது வாங் ஷூய்மிங். ஜூன் 1ஆம் தேதியன்று ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய மூவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட எட்டு பேரில் ஐவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.