மலேசியர்களுக்கான கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு சோதனை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு

2 mins read
f9559ce3-cdef-4b7d-9556-e3d372e8f031
சுல்தான் இஸ்கந்தர் சோதனைச் சாவடியில் மின்வாயிலைப் பயன்படுத்தும் பயணிகளை மலேசிய துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் (இடது கோடி) பார்வையிடுகிறார். - படம்: ஃபடில்லா யூசோஃப்/ ஃபேஸ்புக்

ஜோகூர்பாரு: மலேசியாவின் சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுச் சோதனைச் சாவடி (பிஎஸ்ஐ) வழியாக சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளுக்கு கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவுச் சோதனை இரண்டு வாரங்களில் தொடங்கும் என்று ஜோகூர் மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் ஃபஸ்லி சாலே ஜூன் 2ஆம் தேதி அறிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்­கு­வ­ரத்து, உள்­கட்­ட­மைப்­புக் குழு­வின் தலை­வருமான ஃபஸ்லி சாலே, புதிய கியூஆர் குறியீட்டு சோதனை முறை சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் உள்ள குடிநுழைவு சோதனைச் சாவடியில் (கேஎஸ்ஏபி) தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

“கடந்த சனிக்கிழமை ஜூன் 1ஆம் தேதி அன்று குறிப்பிட்டபடி புதிய சோதனை முறை தொடங்கியது. இந்நாள் வரை அது சுமுகமாக இயங்கி வருகிறது. இந்தச் சோதனை காலகட்டத்தில் இரண்டு கைபேசி செயலிகளை சோதித்து வருகிறோம்,” என்று திரு ஃபஸ்லி ஜூன் 2ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேஎஸ்ஏபி வழியாக பயணம் செய்பவர்கள், மைசெஜாத்ரா கைபேசிச் செயலியில் இணைக்கப்பட்டுள்ள ‘மைடிரிப்’ வழியாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் பயணிகள் ‘மைரென்டாஸ்’ முறையை கைபேசிச் செயலி பயணிகள் பயன்படுத்திப் பார்க்கலாம்.

எனினும் ‘மைரென்டாஸ்’ செயலி இன்னமும் மேம்படுத்தத்தப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் அது முழுமையாகத் தயாராகிவிடும் என்றார் அவர்.

முன்னதாக மலேசிய துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப், இரண்டு குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு சோதனை முறை சோதிக்கப்படும் என்றும் மலேசிய மோட்டார்சைக்கிள் மற்றும் பேருந்துப் பயணிகளுக்கு மட்டும் இது பொருந்தும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே புதிய கியூஆர் சோதனைமுறைக்கு மலேசியர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக த ஸ்டார் ஏடு தெரிவித்தது.

சிங்கப்பூர் எல்லையுடனான குடிநுழைவு சோதனையை விரைவில் முடிக்கும் நோக்கத்தோடு இதுவரை 70,000 பேர் புதிய குடிநுழைவு சோதனை முறைக்கு பதிந்து கொண்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்