மின் ஆற்றலில் இயங்கும் மிதிவண்டியில் செல்லும்போது 16 வயது இளையர் ஒருவர் சாலைத் தடுப்பில் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. குற்றம் புரிந்த சந்தேகத்தின் பேரில் அந்த இளையர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் மே மாதம் 25ஆம் தேதி கில்மார்ட் சாலையில் நடந்ததாகக் காவல்துறை திங்கட்கிழமையன்று ( ஜூன் 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சம்பவம் நடந்த அன்று அச்சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் தடுப்பு அமைத்துச் சோதனையில் ஈடுபட்டதாகக் காவல்துறை கூறியது.
அந்த இளையர் தலைக்கவசம் அணியாமல் மிதிவண்டி ஓட்டியதால் சோதனைக்கு நிற்குமாறு அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினர். ஆனால், அவர் நிற்காமல் வேகமாகச் சென்றதாகக் கூறப்பட்டது.
அவ்வாறு செல்லும் போது போக்குவரத்து காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பின்மீது மோதி மிதிவண்டியிலிருந்து அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது அவரைக் காவல்துறையினர் துரத்திப் பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் அந்த இளையரிடம் சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தததாகக் காவல்துறை கூறியது.
சட்டவிரோதமாக மாற்றி அமைக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த மிதிவண்டியை நிலப்போக்குவரத்து ஆணையம் பறிமுதல் செய்தது.
விசாரணை நடந்து வருகிறது.

