அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினர்களாக திரு டான் சோங் மெங்கும் திரு பீட்டர் சீ லிம் ஹுவாட்டும் திங்கட்கிழமை (ஜூன் 3) பதவி ஏற்றனர். அவர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினராக ஏழு ஆண்டு காலம் இருந்த ஹோ பீ லேண்டின் நிர்வாகத் தலைவர் சுவா தியான் போவின் பதவிக்காலம் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவுற்றதால் ஜேடிசி கார்ப்பரேஷனின் தலைவராக உள்ள திரு டான் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேசிய பல்கலைக்கழகச் சுகாதாரக் குழுமத்தின் துணைத் தலைவராகவும் தெமாசெக் ஹோல்டிங்ஸின் இயக்குநராகவும் அவர் உள்ளார்.
அதேபோல, 2021 ஜனவரி 8ஆம் தேதி முதல் அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினராக இருந்த திரு சீ மீண்டும் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் இயக்குநர் அவைத் தலைவராகவும் அதன் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திரு சீ உள்ளார்.
பதவி ஏற்றுள்ள இரு உறுப்பினர்களும் ஆறு ஆண்டு காலத்திற்கு, அதாவது 2030 ஜூன் 1 வரை அப்பதவியில் நீடிப்பர் என்று அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை (ஜூன் 3) தெரிவித்து உள்ளது.
இவர்கள் தவிர, அதிபர் ஆலோசனை மன்றத்தின் நான்காண்டு கால மாற்று உறுப்பினர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ள சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் கான் சியோவ் கீயும் பதவி ஏற்றுக்கொண்டார்.

