மூத்தோருக்கான வீட்டு வகைகள் குறித்த ஆய்வுக்கு $2.9 மி. ஒதுக்கீடு

2 mins read
7f6c6be5-a217-434d-aba8-9209255c6bc4
வருங்காலத்தில் முதியோர்களின் மாறுபட்ட தேவை, அவர்களின் எதிர்பார்ப்பு, விருப்பங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்காலத்தில மூத்த குடிமக்களின் இல்லங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் $2.9 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, வெவ்வேறு வகையான வீடுகள் எவ்வாறு மூத்தோர் வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இது எதிர்காலத்தில் மூத்தோர் வீடுகளுக்கான திட்டம், அவற்றின் வடிவமைப்பு ஆகியவை குறித்து முடிவு செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்வர்.

வருங்காலத்தில் முதியோர்களின் மாறுபட்ட தேவை, அவர்களின் எதிர்பார்ப்பு, விருப்பங்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) அன்று தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன் கூறினார்.

இது பற்றி சன்டெக் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் பேசிய திருவாட்டி சிம் ஆன், அண்மைய ஆண்டுகளில் மூத்தோருக்காக பல புதிய வீட்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதில் இணக்கமான போக்குடைய மூத்தோர் வசிக்கும் அங்கேயே பராமரிப்பு சேவை வழங்கப்படும் சமூக பராமரிப்பு இல்லங்கள், உட்லண்ட்சில் இருக்கும் கம்போங் அட்மிரல்டி வீடமைப்புத் திட்டம் ஆகியவை அதில் உள்ளடங்கும். இந்த வீடமைப்பு திட்டங்களும் ஆய்வின் ஒரு பகுதியாக இருக்கும்.

“மூத்தோருக்கும் ஆதரவு அளிக்கும் புதிய வழிகளை ஆராய வேண்டிவரும். அத்துடன் முடிவுகளை எடுக்கும் வண்ணம் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்,” என்று திருவாட்டி சிம் ஆன் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்