மனைவியிடம் பாலியல் வன்கொடுமை: 2020க்குப் பின் ஒருவர் மட்டுமே குற்றம் புரிந்துள்ளார்

மனைவியிடம் பாலியல் வன்கொடுமை: 2020க்குப் பின் ஒருவர் மட்டுமே குற்றம் புரிந்துள்ளார்

2 mins read
e36a4d16-2c70-4303-add6-429f5a5dc598
படம். - தமிழ் முரசு

மனைவியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது குற்றமாகாது என்ற சட்டப் பிரிவு 2020ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பிறகு, மனைவியிடம் பாலியல் வன்கொடுமை குற்றம் புரிந்ததாக தண்டிக்கப்பட்டவர் ஒருவர் மட்டுமே என்று தெரியவந்துள்ளது.

அந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மனைவியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும் என்ற சட்டம் அமலானதைத் தொடர்ந்து இதுவரை ஒருவர் மட்டுமே குற்றவாளி என தண்டிக்கப்பட்டுள்ளார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிந்துள்ளது.

இதுபற்றிய கேள்வியை ஐக்கிய நாடுகள் குழு ஒன்று, மாதருக்கு எதிரான பாரபட்சப் போக்கை நீக்குவது தொடர்பில் மே மாதம் 16ஆம் தேதி எழுப்பியது. அதற்கு பதிலளித்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ‌ஷுவேலிங் சிங்கப்பூரில் திருமண உறவில் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற சட்டப் பிரிவு முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.

“இதில் குழுவின் பரிந்துரைப்படி, 2019ஆம் ஆண்டு திருமண உறவில் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற சட்டப் பிரிவை முழுமையாக நீக்கிவிட்டோம். இந்த ஆண்டு முதல் முறையாக மனைவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்,” என்று திருவாட்டி சுன் விளக்கினார்.

திருமண உறவில் பாலியல் வன்கொடுமை பற்றி சட்ட திருத்தம் முதன் முதலில் 2007ஆம் ஆண்டு இடம்பெற்றதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சட்டப் படிப்புப் பள்ளியில் துணை இயக்குநராக உள்ள இணைப் பேராசிரியர் மெர்வின் சியோங் கூறினார். அந்த ஆண்டு திருமண உறவில் வலுக்கட்டாயமாக பாலியல் உறவுகொள்வது, பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற சட்டப் பிரிவின் ஒரு பகுதி நீக்கப்பட்டது என்று திரு மெர்வின் தெரிவித்தார்.

திருமண பந்தம் முறிந்து தம்பதியர் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் சூழலில் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும் என்று விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை திரு மெர்வின் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்