சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையிலும் போட்டியிடும் குழுக்கள் அமைக்கப்படாத நிலையிலும் வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஊகம் பரவி வருகிறது.
இது தொடர்பாக தேர்தல் துறையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அணுகியது.
ஜூன் 3ஆம் தேதி நிலவரப்படி தேர்தல் எல்லை மறுஆய்வுக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று தேர்தல் துறை பதில் அளித்தது.
பிரதமர் பொறுப்பை மே 15ஆம் தேதி லாரன்ஸ் வோங்கிடம் லீ சியன் லூங் ஒப்படைத்தது முதலே தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பதவி ஒப்படைக்கப்பட்ட காலம் செப்டம்பர் தேர்தலுக்கான ஊகத்தைக் கிளப்பி உள்ளது.
காரணம், புதிய பிரதமர் வோங் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் தேசிய தினப் பேரணியில் கலந்துகொண்டு தமது அரசாங்கம் செய்ய இருப்பனவற்றை வெளியிடுவார்.
ஒருவேளை செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டால் அது பொருத்தமான மாதமாக இருக்கலாம்.
பள்ளிக்கூடங்கள் தேர்வுகளை நடத்துவதற்கு முந்திய பருவம் என்பதால் வேட்புமனுத் தாக்கல் நிலையங்களாகவும் வாக்களிப்பு நிலையங்களாகவும் பள்ளிகள் செயல்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல வாக்களிப்பு நிலைய அதிகாரிகளாக பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படலாம்.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரை இவ்வாண்டு பள்ளி விடுமுறை நாள்கள்.
இவற்றின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளதா என்ற கேள்விகளும் செப்டம்பர் 6ஆம் தேதி வாக்களிப்பு நடத்தப்படலாம் என்ற தகவலும் வாட்ஸ்அப் ஊடகம் வாயிலாக பரப்பப்படுகின்றன.
ஆனால், செப்டம்பர் மாத தேர்தலுக்கான சாத்தியக்கூறுகளை அரசியல் ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் தேர்தல் எல்லை மறுஆய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்.
அதற்கு இன்னும் காலக்கெடு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், அந்த ஆய்வுக்குழு அமைக்கப்படுவதற்கும் தேர்தல் செப்டம்பரில் நடத்தப்படுவதற்கும் இடையிலான காலம் மிகக்குறுகியது என்பதும் அவர்களது கருத்து.
தேர்தல் எல்லை மறுஆய்வுக் குழு அமைப்பது என்பது சட்டப்படி கட்டாயம் இல்லை என்றபோதிலும் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ஆம் ஆண்டு முதல், தேர்தலுக்கு முன்பு அந்தக் குழு அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.