தப்பிக்க முயன்ற மோட்டார் சைக்கிளோட்டியை மோட்டார் சைக்கிளில் துரத்திய நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அமலாக்கப் பிரிவு அதிகாரியான 26 வயது திரு துல்ஃபிக்கா அஹாகாசா மாண்டார்.
இந்தச் சம்பவம் ஜூன் 4ஆம் தேதி காலை நிகழ்ந்தது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு லாரிகள், ஒரு வேன் ஆகியவை விபத்துக்குள்ளானதாக காலை 10.40 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது.
“நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அமலாக்கப் பிரிவு அதிகாரி ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிர் பிரிந்தது,” என்று காவல்துறை கூறியது.
மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 18 வயது ஆடவரை அந்த அதிகாரி துரத்திக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த இளையர் கைது செய்யப்பட்டார்.
அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்ததாகவும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் போக்குரத்து தொடர்பான பல்வேறு குற்றங்களைப் புரிந்ததாகவும் நம்பப்படுகிறது.
விரைவுச்சாலையின் ஓரத்தில் திரு துல்ஃபிக்கா, அந்த இளையரை மோட்டார் சைக்கிளில் துரத்துவதைக் காட்டும் காணொளி, எஸ்ஜி ரோடு விஜிலேண்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த இளையர் தமது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் குறைப்பது போல் தோன்றியது. ஆனால் திடீரென்று அவர் மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கூட்டி, வலது பக்கம் திரும்பி, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த லாரியின் குறுக்கே சென்றார்.
அவருக்குப் பின்னால் மிக அருகில் சென்றுகொண்டிருந்த அந்த அதிகாரியின் மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பின் மீது மோதியது.
திரு துல்ஃபிக்காவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
அவரது மரணம் அவரது குடும்பத்தாரையும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
திரு துல்ஃபிக்காவின் மரணம் மனவேதனை அளிப்பதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் தெரிவித்தார். மாண்ட அதிகாரியின் குடும்பத்துக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் விசாரணை நடத்துவதாக அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

