இந்தியத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், உலகத் தலைவர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவு செய்த திரு வோங், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்போகும் திரு மோடியின் வெற்றியை வரலாற்றுச் சாதனை என வர்ணித்தார்.
அந்தப் பதிவில் திரு லாரன்ஸ் வோங், சிங்கப்பூர்-இந்தியாவுக்கு இடையேயான பங்காளித்துவ உறவை வலுப்படுத்துவதில் திரு மோடியுடன் தான் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். அத்துடன், சிங்கப்பூர், இந்தியாவுக்கு இடையிலான அரசதந்திர உறவின் 50 ஆண்டு நிறைவை 2025ஆம் ஆண்டு கொண்டாடுவதை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
திரு மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ளதை புதன்கிழமை (ஜூன் 5ஆம் தேதி) உறுதிசெய்தது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பின் மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகும் இரண்டாவது பிரதமர் திரு மோடி என்பது குறிப்பிடத்தக்கது.