வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலையும் மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் கடந்த மே மாதம் அதிகரித்தன.
இரண்டு மாதச் சரிவுக்குப் பிறகு அவை மே மாதம் உயர்ந்தன.
மே மாதத்தில் ஏறத்தாழ 2,513 வீவக வீடுகள் கைமாறின. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.3 விழுக்காடு அதிகம்.
மாத அடிப்படையில், வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 0.3 விழுக்காடு அதிகரித்ததாக எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co தகவல் வெளியிட்டன.
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை மே மாதம் 1.1 விழுக்காடு ஏற்றம் கண்டது.
முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 0.3 விழுக்காடு குறைந்தது.
முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வீடு வாங்க பலர் விரும்புவதாகவும் ஆனால் அங்கு விற்பனைக்கு விடப்படும் வீவக வீடுகளின் எண்ணிக்கை குறைவு என்றும் இஆர்ஏ சொத்து முகவையின் முக்கிய நிர்வாக அதிகாரி யுஜீன் லிம் தெரிவித்தார்.
“முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள வீவக வீடுகளின் மறுவிற்பனை விலை அதிகரித்துள்ளதால் வீடு வாங்குவோரின் கவனம் முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டையின் பக்கம் திரும்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“குடியிருப்பாளர்களுக்குத் தேவையான வசதிகள், பள்ளிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை உள்ள முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள வீவக வீடுகளை அவர்கள் வாங்குகின்றனர்.
“விற்கப்பட்ட ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீவக வீடுகளில் 68 விழுக்காடு வீடுகள் முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் உள்ளன,” என்று திரு லிம் தெரிவித்தார்.
மூவறை மற்றும் நான்கறை மறுவிற்பனை வீடுகளின் விலை 0.1 விழுக்காடு அதிகரித்தது.
ஐந்தறை மறுவிற்பனை வீடுகளின் விலை 1.6 விழுக்காடு உயர்ந்தது.
எப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் எக்செக்கியூட்டிவ் மறுவிற்பனை வீடுகளின் விலை மே மாதம் 1.1 விழுக்காடு குறைந்தது.

