செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இளையர்கள், பெண்கள், எதிர்காலத் தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவு கிடைக்க சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்து செயல்படவுள்ளன.
அதற்காக புதிய திட்டத்தை இரு நாடுகளும் ஜூன் 5ஆம் தேதி (புதன்கிழமை) வெளியிட்டன. தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோவும் அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஜினா ரைமோன்டோவும் திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.
‘ஏஐ டேலண்ட் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் இந்தப் புதிய திட்டம் ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள ‘பெண்களுக்கு தொழில்நுட்பம்’ என்ற பிரிவின் விரிவாக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. ‘பெண்களுக்குத் தொழில்நுட்பம்’ 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர்களுக்குத் தேவையான திறன்களைப் பெறமுடியும் என்பதை உறுதி செய்வதற்கான இந்தத் திட்டங்களை வெளியிட்டுள்ளோம் என்று ரைமோன்டோ கூறினார்.
மேலும் சிங்கப்பூரில் நடக்கும் இண்டோ-பசிபிக் பொருளியல் கூட்டத்தில் கலந்துகொள்ள திருவாட்டி ரைமோன்டோ வந்துள்ளார்.
சிங்கப்பூரின் மின்னிலக்க பொருளியலின் மீது பெரிய நம்பிக்கையைக் கொண்டுள்ளது அமெரிக்கா என்பதை இந்தக் கூட்டு முயற்சிகள் காட்டுவதாக ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.
இனிவரும் ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் மின்னிலக்கத் துறையிலும் முதலீடு செய்யவுள்ளன. முதலீடுகள் எளிதாக 50 பில்லியன் வெள்ளியை தாண்டக்கூடும் என்றும் ஜோசஃபின் டியோ கூறினார்.
அமெரிக்க நிறுவனங்களும் சிங்கப்பூர் நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை உயர்த்தி வருகின்றன. சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் 130,000க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர்கள் நடத்திய இந்த சந்திப்பில் கூகள், கிராப், மைக்ரோசாப்ட், சாங்கி விமான நிலைய குழுமம் உள்ளிட்ட பல இரு நாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டன.

