பசுமைப் பொருளியல் உருமாற்றத்திற்கான முதலீடுகள், கடந்த 50 ஆண்டுகளில் ஆகப் பெரிய முதலீட்டு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருப்பதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் புதன்கிழமை (ஜூன் 5) தெரிவித்தார். இத்தகைய முதலீடுகளின் நற்பலன்களில் சில, உடனடியாக அடையக்கூடியவை என்றும் அவர் முதலீட்டாளர்கள் முன்னிலையில் கூறினார்.
சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற வளமைக்கான இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்புக் கருத்தரங்கில் (ஐபிஇஎஃப்) பேசிய திரு தர்மன், முதலீடு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பெரும் வாய்ப்பு தற்போது இருப்பதாகக் கூறினார்.
உலகின் பொருளியல் வளர்ச்சியில் 10 விழுக்காடு, பசுமைத் துறையின் பங்களிப்பிலிருந்து விளைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இது வெறும் ஆரம்பமே என்றார்.
2022ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கிய ஐபிஇஎஃப் பொருளியல் திட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள் பங்கேற்கின்றன.
“வேண்டிய நற்பலனை அடைய நாம் எப்படி கூட்டாகச் செயல்படலாம்? அதிக வளமுள்ளவர்கள் எப்படி கூடுதலாக முதலீடு செய்யும்படி ஊக்குவிக்கலாம்? இது சுமையைப் பகிர்வது பற்றியதல்ல. பொருளியல், சமுதாய நற்பலனுக்காக நாம் எப்படி ஒன்றாக முதலீடு செய்கிறோம் என்பது பற்றியது,” என்று திரு தர்மன் கூறினார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறு செய்வதால், பசுமை தொடர்பான கூட்டு முயற்சிகளை விரும்பும்படியான மனமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார் அவர்.
பருவநிலை நெருக்கடி தொடர்பான தற்போதைய விவாதங்கள், 2050ல் அல்லது 2100ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்படும் இலக்குகளைப் பற்றிப் பேசுவதைச் சுட்டிய திரு தர்மன், அத்தகைய இலக்குகள் சராசரி மனிதர்களுக்கு வெகு தொலைவில் இருப்பதாகச் சொன்னார்.
மாறாக, இந்தக் காலகட்டத்திற்குள் அல்லது அடுத்த சில ஆண்டுகளுக்குள் அடையக்கூடிய நன்மைகளைக் கருத்தில்கொண்டு பேசும்போது சாமானியர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நகர்ப்புறங்களில் சூற்றுச்சுழல் தூய்மைக்கேட்டை எப்படி குறைக்கலாம்? வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், அவரவர் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழும்படியாக அமைத்துக்கொள்ளலாம்? அரசியல் பரப்புரைகளிலும் இது கவனிக்கப்படவேண்டும்,” என்று அவர் சொன்னார்.
“இத்தகைய அணுகுமுறை மூலம் மனப்போக்கு மாறி, அரசாங்கம் எடுத்துவரும் பசுமை நடவடிக்கைகளுக்கு அரசியல் ஆதரவாக உருவெடுக்கும். கரியமில வாயு விலைக் கட்டமைப்பு, அறிவார்ந்த விலைக்கழிவு உத்திகள், மறுபயிற்சி, ஊழியர்களுக்கான திறன் மேம்பாடு போன்ற அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிட்டும்,” என்றார் திரு தர்மன்.

