குளிரூட்டும் சாதனங்களின் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகள் பீச் ரோட்டில் உள்ள குடியிருப்பு வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல் ஆகியவற்றை உள்ளடக்கி சவுத் பீச் டவரிலும் சோதிக்கப்படவிருக்கிறது.
குளிரூட்டும் சாதனங்களின் குளிரூட்டும் சுருள்களில் பூசப்படும் ஒருவகை நீர் எதிர்ப்புப் பூச்சு எரிசக்தியை குறைப்பதற்காக இதில் பயன்படுத்தப்படுகிறது. இது, இரண்டு முயற்சிகளில் ஒன்று.
அலுவலகங்களிலும் ஹோட்டல்களிலும் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டும் சாதனங்களின் எரிசக்தியை குறைப்பது புதிய முயற்சிகளின் முக்கிய நோக்கம் என்று கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) ஜூன் 6ஆம் தேதி அன்று தெரிவித்தது.
இந்தத் திட்டங்களுக்கு பிசிஏயின் பசுமைக் கட்டட புத்தாக்க குழுமத்தின்கீழ் 1.2 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நீர் எதிர்ப்பு பூச்சு பற்றி விளக்கமளித்த பிசிஏ, தற்போதைய பெரிய குளிரூட்டும் சுருள்களுக்கு மேல் நீர் குளிர்ந்து பனிக்கட்டிபோல படிந்துவிடுவதை சுட்டிக்காட்டியது.
இதனால் அதிக எரிசக்தி தேவைப்படுகிறது. ஹோட்டல் போன்ற கட்டடங்களில் மொத்த எரிசக்தியில் ஏறக்குறைய பாதி குளிரூட்டும் சாதனங்களுக்கு செலவழிக்கப்படுகின்றன.
மேலும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியால் குளிர்ந்த காற்றின் தரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பராமரிப்புச் செலவையும் அதிகரிக்கச் செய்கிறது.
நீர் எதிர்ப்புப் பொருள் பூசுவதால் சுருளின் வெப்ப மாற்று ஆற்றல் மேம்படுகிறது. இதை, ஏற்கெனவே உள்ள புதிய சாதனங்களில் அமல்படுத்துவதும் எளிது என்று ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சவுத் பீச் குழுமத்துக்குச் சொந்தமான சவுத் பீச் டவரில் உள்ள அலுவலகங்களிலும் ஓசிபிசி புரோபர்ட்டிஸ் சர்விசசுக்குச் சொந்தமான பேங்க் ஆஃப் சிங்கப்பூர் நிலையத்திலும் புதிய முறை சோதிக்கப்படவுள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் குளிரூட்டும் சாதனங்களுக்கான ஒப்பந்த நிறுவனமான போவென் இன்ஜினியரிங் ஆகியவை கூட்டாக இதற்கான ஆய்வை நடத்தியிருக்கின்றன.

