இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் தெம்பனிசில் இருவரைப் பலிவாங்கிய வாகன விபத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் தன்னைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்களை நியமிப்பதாக 8வோர்ல்ட் செய்தி நிறுவனம் நீதிமன்ற இணையத்தளத்தில் வெளியான பதிவுகளை மேற்கோள்காட்டி தெரிவித்தது.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தது, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியது உள்ளிட்டவற்றின் தொடர்பில் 42 வயது முகம்மது ஷஃபி இஸ்மாயில் மீது ஏப்ரல் 25ஆம் தேதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர், சிகிச்சை முடிந்து ஏப்ரல் 24ஆம் தேதி மருத்துவமனையை விட்டு வெளியேறியதும் கைது செய்யப்பட்டார்.
அவருடைய ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டது.
இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி 6 வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் தொடக்கக்கல்லூரி மாணவியான 17 வயது அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்ரில், 57 வயது திருவாட்டி நூர்ஸிஹான் ஜுவாஹிப் ஆகியோர் மாண்டனர்.
அவர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 7ஆம் தேதி நடைபெற இருந்தது.
இருப்பினும், சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஆய்வக அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கு விசாரணை ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ‘8வர்ல்ட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷஃபி, S$30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் அரசுத் தரப்பு சாட்சிகளைத் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

