சிறப்பு கல்வித் தேவை உள்ளோரை வேலைக்குத் தயார் செய்வதற்கான பயிற்சி வகுப்புகளை சிங்கப்பூர் அறநிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது.
‘டோமோவோர்க்’ என்னும் அந்த அறநிறுவனம் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடற்குறை உள்ளோரையும் பிறரின் அல்லது கருவிகளின் உதவியுடன் செயல்படுவோரையும் வேலைக்குத் தயார்ப்படுத்தும் பயிற்சி வகுப்புகளை அது நடத்துகிறது.
‘திறனை முடுக்கிவிடும் திட்டம்’ என்னும் பெயரில் 12 வாரங்களுக்கு அந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சிறப்புக் கல்வித் தேவையுடைய 85 பேர் அதன்மூலம் பலனடைந்து உள்ளனர்.
பயிற்சி பெறுவோரை வேலைக்குத் தயார்ப்படுத்த பெரிய நிறுவனங்களுடன் அந்த அறநிறுவனம் பங்காளித்துவத்தில் ஈடுபட்டுள்ளது. அதன் மூலம், வழிகாட்டுதல், கட்டமைத்தல் மற்றும் கற்றல் வாய்ப்புகளை பயிற்சி பெறுவோருக்கு வழங்க முடிகிறது.
இது தவிர, உடற்குறையுள்ள, கருவிகளின் உதவி தேவைப்படும் மாணவர்கள் 295 பேருக்கு ‘டோமோவோர்க்’ அறநிறுவனம் உதவி இருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மைக் மோமோட்டா கூறினார்.
பயிற்சி முடிந்த ஆறு மாத காலத்திற்குள் அதில் பங்கேற்றோரில் 80 விழுக்காட்டினருக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு பலதுறைத் தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் படித்த உடற்குறையுள்ள பட்டதாரி மாணவர்கள், அண்மையில் படித்து முடித்தவர்கள் போன்றோர் அந்தப் பயிற்றுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
உடற்குறை உள்ளோர் பலன்பெறும் வகையில் திறன் மேம்பாடு, பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான மானியம் போன்ற பல்வேறு திட்டங்களை அது நடத்துகிறது.
அறநிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு விழா நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வியாழக்கிழமை (ஜூன் 6) கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள், பங்காளித்துவ அமைப்பைச் சேர்ந்தோர் உள்ளிட்ட ஏறக்குறைய 150 பேர் அவ்விழாவில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையிலான திட்டங்களை நிகழ்ச்சியில் படைத்தனர். அவர்களில் ஒருவரான 19 வயது மாணவர் லாய் சு யிங். ஓரளவு காது கேட்கும் திறன் இழந்த தமக்கு, வேலைக்கான நேர்காணலை காணொளி வாயிலாக நடத்த நிறுவனங்கள் முன்வரவில்லை என்றும் பயிற்சித் திட்டத்திற்குப் பிறகு அந்தப் பிரச்சினை தீர்ந்து பலன் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.