லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம் சென்ற மாதம் கடுமையாகக் குலுங்கிய சம்பவத்தை அடுத்து சிங்கப்பூரில் பலரும் விமானப் பயணம் குறித்த அச்சத்துக்கு சிகிச்சை நாடுகின்றனர்.
இத்தகைய அச்சம் ‘ஏரோஃபோபியா’ என்று அழைக்கப்படுகிறது.
இதனால் லேசான பயம் முதல் விமானப் பயணம் செய்யவேண்டும் என்ற எண்ணமே கடுமையாக பீதியடையச் செய்வது வரை பல்வேறு நிலைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
விமானப் பயணம் இன்னும் பாதுகாப்பான பயணமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்கின்றனர் விமானப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள். இருப்பினும் இத்தகைய அச்சம் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சேவை வழங்கும் நிறுவனங்களை மேற்கோள்காட்டி ‘சிஎன்ஏ’ தகவல் வெளியிட்டுள்ளது.
மே 21ஆம் தேதி, மியன்மாரின் ஐராவதி ஆற்றுப்படுகைக்குமேல் பறந்துகொண்டிருந்தபோது எஸ்கியூ321 விமானம் கடுமையாகக் குலுங்கியதில் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் மாண்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.
அந்த விமானம் பேங்காக்கில் அவசரமாகத் தரையிறங்கியது. அதில் பயணம் செய்த பலரும் திகிலூட்டிய அனுபவங்களை நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டனர்.
இருக்கைவார் அணியாதவர்கள் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்பட்டது. ‘ரோலர் கோஸ்டரில்’ பயணம் செய்வதுபோல் இருந்ததாகச் சிலர் குறிப்பிட்டனர்.
சில நாள்கள் கழித்து கத்தாரின் டோஹா நகரிலிருந்து அயர்லாந்தின் டப்லின் நகருக்குச் சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானமும் இதேபோல் காற்றுக் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டது. அதில் சிலர் காயமடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் செயல்படும் ‘சைக் கனெக்ட்’ எனும் உளவியல் சிறப்பு மருந்தகம், இதற்கு முன்னரும் ‘ஏரோஃபோபியா’ எனும் விமானப் பயணம் தொடர்பான அச்சம் குறித்துச் சில மாதங்களுக்கு ஒருமுறை யாரேனும் தொலைபேசியில் அழைப்பர் என்றும் இப்போது அன்றாடம் குறைந்தது இருவர் அழைப்பதாகவும் கூறியது.
அடுத்தடுத்து இரு சம்பவங்கள் நிகழ்ந்தது பயணிகளிடையே அச்சத்தை அதிகரித்திருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறினர்.
மக்கள்தொகையில் ஐந்து விழுக்காட்டினர் ‘ஏரோஃபோபியா’வால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தலைவலி, நோய்வாய்ப்படுதல், இதயத் துடிப்பு அதிகரித்தல், வியர்வை உள்ளிட்டப் பல்வேறு அறிகுறிகளை இவர்களிடம் காணலாம்.
சிகிச்சை நாடுவோரிடம் இதுகுறித்து விரிவாகப் பேசுதல், சில நேரங்களில் கலைகளில் ஈடுபடுவதன் வாயிலாக அச்சத்தைப் போக்குதல் எனப் பல்வேறு வழிகளைச் சிகிச்சையாளர்கள் கையாள்கின்றனர்.
மூச்சுப் பயிற்சி போன்ற உடலைத் தளரச் செய்யும் நடவடிக்கைகள், கவனத்தைத் திசைதிருப்பும் செயல்கள் போன்றவை ‘ஏரோஃபோபியா’வைத் தணிக்கக் கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.
இத்தகைய அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு இயன்றவரை அவர்களுக்கு ஆதரவு தர முயலும்படி பொதுமக்களை வல்லுநர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.