தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்துறை வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் திறனை மேம்படுத்தவும் புதிய கழகம்

2 mins read
4940d757-b290-49bc-b73a-0e45518dfc1a
(இடமிருந்து) பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் கழகத்தின் கல்வித் தலைவர் டாக்டர் விக்டர் கோ, பிஐஎல் நிர்வாகத் தலைவர் தியோ சியோங் செங், போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட், பிஐஎல் இன் தலைமை நிர்வாக அதிகாரி லார்ஸ் கிறிஸ்டியன் காஸ்ட்ரூப் ஆகியோர் ஜூன் 7ஆம் தேதி நடந்த பிஐஎல் கழகத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள முக்கிய கப்பல் நிறுவனம், பணியாளர்களின் திறன் நிலைகளை மேம்படுத்துவதற்கும் புதிய திறமைகளை வளர்ப்பதற்கும் ஒரு பயிற்சி கழகத்தை உருவாக்கியுள்ளது.

‘பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ்’ (பிஐஎல்) எனும் அந்தக் கப்பல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கழகத்தில் கப்பல் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் புதிய பணியாளர்களுக்கும் அவரவருக்குத் தேவையான பயிற்சியை அந்த நிறுவனம் வழங்கவுள்ளது.

ஜூன் 7ஆம் தேதி குயோகோ மிட்டவுனில் நடைபெற்ற கழகத்தின் தொடக்க விழாவில் போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங்  டாட் கலந்துகொண்டார்.

கடல்துறை அனைத்துலக வர்த்தகத்திற்கு முக்கியமானதாகவும் உலகின் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான சரக்குகள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுவதாகவும் கழகத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அமைச்சர் சீ தெரிவித்தார்.

அரசாங்கம், தொழில்துறை, தொழிற்சங்கம் ஆகிய மூன்றுக்கும் இடையேயான வலுவான முத்தரப்பு பங்காளித்துவத்தைப் பயன்படுத்தி, கடல்துறை திறன் மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக விளங்குவதை சிங்கப்பூர் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் திரு சீ.

“உலகளாவிய கடல்துறை தொழில்துறையானது மின்னிலக்க மயமாக்கல், கரிம வெளியேற்றம் போன்ற புதிய சவால்களை ஏற்றுக்கொண்டு வருவதால், கடல்துறை தொழிலை சார்ந்திருக்கும் சிங்கப்பூர் தமது பணியாளர்களின் திறமையையும் திறனையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். இதனால் தொழிலாளர்கள் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும்,” என்று திரு சீ கூறினார்.

இந்தக் கழகத்தில் கடல்துறை நிதி, கடல்துறை வர்த்தகம், நீடித்த நிலைத்தன்மை, கரிம வெளியேற்றம், கப்பல் செயல்பாடுகள் ஆகிய படிப்புகள் உள்ளன.

தலைமைப் பண்பு, புத்தாக்கம், மொழி ஆளுமை, சமூக நல்லிணக்கம், தொடர்புத் திறன் போன்ற மனிதவள திறன்களைக் குறிக்கும் படிப்புகளையும் கழகம் வழங்கவுள்ளது.

மேலும், நிர்வாக நிபுணர்களை உருவாக்குவதற்கான பிஐஎல் நிறுவனத்தின் திட்டத்தையும் கழகம் ஆதரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிறுவனத்தின் உற்பத்தித் திறனையும் புத்தாக்கத்தையும் ஆதரிக்கும் அதே வேளையில் எதிர்காலத்தில் ஊழியர்களின் தொழில் வாழ்க்கைப்போக்கை நிரூபிக்கும் வகையில் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் நிர்வாகம் விரும்புவதாக பிஐஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லார்ஸ் காஸ்ட்ரூப் ஜூன் 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

“வலுவான, திறமையான, புத்தாக்கம் நிறைந்த, நீடித்த நிலைத்தன்மையுடன் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிறுவனமாக பிஐஎல் மாறுவதால், பிஐஎல் கழகத்தின் கட்டமைக்கப்பட்ட விரிவான திட்டத்தின் மூலம் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்