தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநலம், பருவநிலை மாற்றம் பற்றிய குழுக்கள் மூலம் சிங்கப்பூரர்களுடன் இணைய மசெக திட்டம்

3 mins read
e9431e8b-6c18-4c46-95df-696eae0c04be
மக்கள் செயல் கட்சியின் புதுப்பிப்புப் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ் பாவ்

மனநலம், பருவநிலை மாற்றம் அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் மக்கள் செயல் கட்சியில் புதிதாக இரண்டு குழுக்கள் சேர்க்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (ஜூன் 8) காலை மரினா பே சேண்ட்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பிரதமர் வோங் பதவியேற்ற பிறகு தமது முதல் பொது நன்றியுரையை மக்கள் செயல் கட்சி ஆர்வலர்கள், பங்காளிகள் என 400 பேர் முன்னிலையில் வழங்கினார்.

கட்சி உறுப்பினர்களுடன் ஆரவாரத்துடன் காணப்படும் பிரதமர் வோங்.
கட்சி உறுப்பினர்களுடன் ஆரவாரத்துடன் காணப்படும் பிரதமர் வோங். - படம்: ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸ்

“தேசிய விவகாரங்களுக்கு அப்பாற்பட்டு பருவநிலை மாற்றத்திற்கும், மனநலனுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஒரு கட்சியாக ஒன்றிணைந்து நாம் இந்த இரு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பங்காளிகளுடன் கைகோர்க்க வேண்டும். இதில் ஈடுபாடு உள்ள யார் வேண்டுமானாலும் இந்த இரு புதிய குழுக்களில் சேர்ந்து அவர்களின் பங்களிப்பை அளிக்க முன் வரலாம்,” என்று பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.

‘ரிஃப்ரெஷ் பிஏபி’ எனும் மக்கள் செயல் கட்சி புதுப்பிப்புப் பயிற்சி மூலம் இந்தப் புதிய இரண்டு குழுக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தப் புதுப்பிப்புப் பயிற்சி பற்றிக் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மக்கள் செயல் கட்சியின் விருது மற்றும் மாநாட்டில் பிரதமர் வோங் அறிவித்திருந்தார்.

கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற இந்தப் பயிற்சியை தேசிய வளர்ச்சி அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான டெஸ்மண்ட் லீயும் இதர 4ஜி தலைவர்களும் வழிநடத்தினர். இதில் 2,300க்கும் மேற்பட்ட மக்கள் செயல் கட்சி ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.

தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி மனநலக் குழுவையும், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, மற்றும் மனிதவள அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சரான டாக்டர் கோ போ கூன் பருவநிலை மாற்றம் தொடர்பிலான குழுவையும் வழிநடத்தவுள்ளனர்.

“சிங்கப்பூரர்களுடன் நாம் மேலும் நெருக்கமான தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டும். நேருக்கு நேர் சந்தித்து சிங்கப்பூரர்களுடன் இணைய வேண்டும். மின்னிலக்கத் தளங்கள் மூலமும் நாம் சிங்கப்பூரர்களுடன் இணைய அதிக முயற்சிகள் எடுக்கப்படும். இதன் மூலம் சிங்கப்பூரர்களும் மக்கள் செயல் கட்சியைப் பற்றி சிறந்த புரிதலைப் பெறலாம்.

தொடர்பு இருவழியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் ஊடகங்களை அதிகமாகச் சந்திக்கவுள்ளேன். சிங்கப்பூரர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களை அதிகம் ஈடுபடுத்துவேன்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

“அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் சிறப்பானதொரு கட்சியாகத் தொடர்ந்து விளங்க நம் கதவுகள் எல்லோருக்கும் திறக்கப்படும். நம் கட்சியின் முதுகெலும்பு நம் ஆர்வலர்கள். இவர்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் செயல் கட்சியின் கட்டமைப்பு நண்பர்கள் எனும் மற்றொரு பிரிவும் உள்ளது. புதிய யோசனைகள் இருந்தால் எங்களுடன் சேர மக்களை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுடன் கைகுலுக்கிய பிரதமர் வோங்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுடன் கைகுலுக்கிய பிரதமர் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்சி ஆர்வலராக இல்லாமல் இருந்தாலும் இந்த விவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள எந்தக் குடிமகனும் அந்தக் குழுக்களில் சேரலாம் என்பதைப் பிரதமர் வோங் தமது உரையில் வலியுறுத்தினார். குறிப்பிட்ட சில அம்சங்களில் சிங்கப்பூரர்களுக்குக் குரல் கொடுக்க மக்கள் செயல் கட்சியில் இருக்கும் அரசாங்க நாடாளுமன்றக் குழுக்களுக்கு வழிவகுக்கப்படும்.

தமது உரையில் இது மக்கள் செயல் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா என்று குறிப்பிட்ட பிரதமர் வோங், “நம் கட்சி பல ஆண்டு காலமாக வளர்ச்சி கண்டு வருகிறது. சிங்கப்பூரர்களின் ஆர்வத்தை முன்னிலைப்படுத்தி வெறும் சொற்களோடு மட்டும் நிறுத்தாமல் அதைச் செயல்படுத்துவது தான் நம் கட்சியின் அடையாளம்,” என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “சிங்கப்பூர்களுடனும், ஆர்வலர்களுடனும் நன்கு உரையாடிய பிறகு நாங்கள் மனநலம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்த முடிவெடுத்தோம். இளம் சிங்கப்பூரர்கள் அதிகளவில் மனநலம் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் சிங்கப்பூரைப் பாதிக்கும் முன் அதற்குக் தக்க நடவடிக்கைகள் எடுப்பது சரியானதாக தோன்றியது.

“மனநலக் குழு பல சமூகப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படும். இந்தக் குழுவில் என்னுடன் டாக்டர் வான் ரிஸாலும் ரேச்சல் ஓங்கும் இணைந்து செயலாற்றுவார்கள். இதில் ஆர்வமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களுடன் இணைவார்கள். கட்சியில் இல்லாத அனுபவமிக்கவர்களும் இந்தக் குழுவில் எங்களுடன் ஒருங்கிணைவார்கள். இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன,” என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார் டாக்டர் ஜனில் புதுச்சேரி.

குறிப்புச் சொற்கள்