இம்மாதம் 21ஆம் தேதியன்று ஏழு புதிய எம்ஆர்டி நிலையங்கள் வழியாக பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தில் அந்த ஏழு எம்ஆர்டி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 23ஆம் தேதி தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தின் நான்காவது கட்டம் திறக்கப்படுவதை முன்னிட்டு முன்னோட்டமாக இந்த இலவசப் பயண வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தஞ்சோங் ரூ, காத்தோங் பார்க், தஞ்சோங் காத்தோங், மரின் பரேட், மரின் டெரஸ், சிக்லாப் மற்றும் பேஷோர் ஆகிய ஏழு நிலையங்கள் வழியாக இலவசமாக பயணம் செய்யும்போது பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு, நடவடிக்கைகளிலும் உற்சாகத்துடன் ஈடுபடலாம்.
ஜூன் 21ஆம் தேதி பிற்பகலிலிருந்து இரவு ஒன்பது மணி வரை பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூன் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஒருவேளை அன்றைய தினம் மழை பெய்தால் பயணிகள், கார்டன்ஸ் பை த பே நிலையத்திலிருந்து தஞ்சோங் ரூ நிலையம் வரை குறுகிய தொலைவு ரயில் சேவையைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் கூறியுள்ளது.
இதற்கு மாற்றாக, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் நான்காவது கட்ட நிலையங்களுக்கு வெளியே அல்லது அருகே நிற்கும் பேருந்து எண் 11, 30, 158 ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

