சிங்கப்பூரின் ஆகப் பெரிய சூரியசக்திப் பண்ணைக்கான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு கிராஞ்சி நீர்த்தேக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்த்தேக்கத்தில் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்துவதன் மூலம் அங்குள்ள பல்வேறு உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அவ்வளவாக இல்லை என்று சுற்றுப்புற ஆய்வில் தெரியவந்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை அதிகரிக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளை இது அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
புதிய சூரியசக்திப் பண்ணை 114 மெகாவாட்-பீக் தூய எரிசக்தியை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் 2 கிகாவாட்-பீக் சூரியசக்தி ஆற்றலைக் கொண்டிருக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டிருக்கிறது.
கிராஞ்சி நீர்த்தேக்கத்தில் கட்டப்படும் சூரியசக்திப் பண்ணை மூலம் கிடைக்கும் எரிசக்தி அதில் கிட்டத்தட்ட 7 விழுக்காடாக இருக்கும் என்று சுற்றுப்புற மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த 2 கிகாவாட்-பீக் இலக்கு மூலம் ஏறத்தாழ 350,000 குடும்பங்களுக்கு, ஓராண்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடியும்.
எரிசக்தி சந்தை ஆணையத்தைப் பொறுத்தவரை, இவ்வாண்டின் முதல் காலாண்டு நிலவரப்படி சிங்கப்பூரின் சூரியசக்தி ஆற்றல் ஏறத்தாழ 1.2 கிகாவாட்-பீக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சூரியசக்திப் பண்ணையைக் கட்டுவது தொடர்பான பரிந்துரையை முதன்முதலில் 2018ஆம் ஆண்டில் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் முன்வைத்தது.
தனியார் துறை பயன்பாட்டுக்காக 100 மெகாவாட்-பீக் ஆற்றல் கொண்ட மிதக்கும் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய தகவல் சேகரிப்பில் கழகம் தீவிரம் காட்டியது.
இந்நிலையில், கிராஞ்சி சூரியசக்திப் பண்ணைக்கான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2027ஆம் ஆண்டுக்கும் 2028ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அது செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராஞ்சி நீர்த்தேக்கத்தில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்த் தாவரங்களைச் சாப்பிட பல பறவைகள் அங்கு வருவதுண்டு.
அவற்றில் அருகிவரும் உயிரினங்களைச் சேர்ந்த பறவைகளும் அடங்கும்.
இத்தகைய உயிரினங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதிருக்க நீர்த்தேக்கத்தின் பரப்பளவில் 21.5 விழுக்காடு பகுதியில் மட்டும் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

