சிங்கப்பூர் அதன் எரிசக்திக் கலவையை பசுமையாக்க மின்சார உற்பத்தியில் மேலும் அதிகமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
அதற்காக, மின் உற்பத்தியின் மீள்திறனையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த கூடுதல் திறன்கள் சேர்க்கப்பட உள்ளதாக எரிசக்திச் சந்தை ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தெரிவித்தது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்திறனை 2 கிகாவாட்டுக்கு உயர்த்த சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக இவ்வாண்டின் முதல் காலாண்டுவரை 1.2 கிகாவாட் மின்திறனை அது அடைந்துவிட்டது.
சிங்கப்பூரின் உள்நாட்டு மின்சார உற்பத்தியில் சூரிய சக்தி மின்சாரத்தின் பங்கு 1 விழுக்காட்டுக்கும்கீழ் உள்ளது. 2050ஆம் ஆண்டுவாக்கில் எழும் தேவை அதிகரிப்பை ஈடுசெய்வதில் ஏறத்தாழ 10 விழுக்காட்டுப் பங்கை அது வகிக்கக்கூடும்.
குறைந்த கரிமம் அடிப்படையிலான மின்சாரத்தில் குறைந்தபட்சம் 4 கிகாவாட்டை வட்டார நாடுகளில் இருந்து ஆணையம் தருவிக்க உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளிப்பாடற்ற சிங்கப்பூர் என்ற நிலையை எட்டும் முயற்சிகளுக்குக் கைகொடுக்க அவ்வாறு செய்யப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூர் தனது மின் உற்பத்திக்கு 95 விழுக்காடு இயற்கை எரிவாயுவைச் சார்ந்துள்ளது.
நாள் முழுவதும் எல்லா நேரமும் சூரிய சக்தித் தகடுகளால் மின் உற்பத்தி செய்ய இயலாது என்பதால் வீடுகள், வர்த்தகங்கள் மற்றும் தொழிற்கூடங்களுக்கான மின் தேவைக்கும் மின் விநியோகத்துக்கும் இடையே முரண்பாடான நிலை ஏற்படலாம்.
வர்த்தகங்களும் தொழிற்கூடங்களும் முழுவேகத்தில் இயங்கக்கூடிய பிற்பகல் வேளையிலும் வெப்பமான நாள்களிலும் மின் தேவை உச்சத்தைத் தொடலாம்.
தொடர்புடைய செய்திகள்
அதேநேரம், சூரியசக்தி மின் உற்பத்தியில் ஏற்படும் ஏற்ற இறக்கம் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையில் சமமற்ற நிலையை உருவாக்கலாம். அதனால் இடையூறுகளும் மின் உற்பத்தியில் நிலையற்ற தன்மையும் ஏற்படலாம் என்றது ஆணையம்.

