பிரதமர் லாரன்ஸ் வோங் புருணைக்கு மேற்கொண்ட தமது அறிமுகப் பயணத்தை செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) முடித்துக்கொண்டார். முன்னதாக, பண்டார் ஸ்ரீபகவானில் உள்ள அரண்மனையில் புருணை சுல்தான் ஹஸனல் போல்கியாவை திரு வோங் சந்தித்துப் பேசினார். அதிகாரபூர்வ மதிய விருந்தில் இருவரும் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் நிதி அமைச்சருமான திரு வோங், புருணை-சிங்கப்பூர் 40 ஆண்டு கால அரசதந்திர உறவுக்கான உறுதிமிக்க ஆதரவைப் புகழ்ந்தார். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான சீர்மிகு உறவுகளை பலப்படுத்துவதில் சிங்கப்பூருக்கு இருக்கும் கடப்பாட்டை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
மேலும், சிங்கப்பூர் ஆயுதப் படை புருணையில் பெற்றுவரும் பயிற்சிக்கு அளித்து வரும் நீண்டகால ஆதரவுக்காகவும் இருநாட்டின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஆழமான, பன்முக ஒத்துழைப்புக்காகவும் புருணை சுல்தானுக்கு திரு வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
1967 ஜூன் மாதம் முதல் இருநாடுகளுக்கு இடையில் நீடித்து வரும் இருதரப்பு நிதி மற்றும் பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவிய நாணயப் பரிமாற்ற உடன்பாட்டின் முக்கியத்துவத்தை திரு வோங் அப்போது எடுத்துரைத்தார்.
மே 15ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைநகரங்களுக்கு திரு வோங் சடங்குபூர்வ அறிமுகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
புருணைக்கு அடுத்தபடியாக அவரது பயணத் திட்டத்தில் மலேசியா இடம்பெற்று உள்ளது.
இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு பிரதமராக லீ சியன் லூங் பொறுப்பேற்ற பின்னரும் இதேபோன்று புருணை, மலேசியா உள்ளிட்ட வட்டார நாடுகளுக்கு அவர் அறிமுகப் பயணம் மேற்கொண்டார்.
மலேசியாவில் புதன்கிழமை (ஜூன் 12) அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்திப்பதுடன் மதிய விருந்திலும் திரு வோங் பங்கேற்பார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய துணைப் பிரதமரும் ஊரக, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அகமது ஸாஹித் ஹமிதி, மற்றொரு துணைப் பிரதமரும் எரிசக்தி உருமாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபடில்லா யூசோஃப் ஆகியோர் சிங்கப்பூர் பிரதமரை தனித் தனியாகச் சந்திப்பார்கள்.
திரு வோங்குடன் அவரது மனைவி, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தொடர்பு, தகவல் மற்றும் சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் ஆகியோரும் மலேசியா சென்றுள்ளனர்.