நளபாகத்தில் துணைவியரை நெகிழ வைத்த கணவன்கள்

இறைச்சி வறுவல், மிளகாய் ‘பனீர்’, ‘சார்டின்’ குழம்பு, மக்கரோனி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்த ஒன்பது தந்தையர், தங்களது துணைவியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

நளபாகத்தில் துணைவியரை நெகிழ வைத்த கணவன்கள்

படம்: சன்லவ் இல்லம்

12 Jun 2024 - 2:45 pm

2 mins read

தந்தையர் தினக் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக, வயதில் மூத்த தந்தையர்கள் சிலர் ஒன்றுகூடி தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சுவையான உணவு வகைகளைச் சமைத்துத் தந்தனர். 

ஹவ்காங் அவென்யு 8லுள்ள சன்லவ் பராமரிப்பு இல்லத்தின் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் இந்நிகழ்ச்சி ஜூன் 7ஆம் தேதி நடைபெற்றது. 

முதன்முறையாக நடத்தப்பட்ட இந்தச் சமையல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 பேர் கூடி குதூகலத்தில் இணைந்தனர்.

வீட்டில் சமையலறையில் கோலோச்சும் தாய்மார்களுக்கு இம்முறை அவர்களது கணவர்கள் உணவு சமைத்தனர். 

அடுப்புத் தீயின் தணலைப் பொருட்படுத்தாது மளமளவென்று சமையல் வேலைகளைக் கணவன்கள் பார்த்தனர். அவர்களின் கைவண்ணத்தில் குழம்பின் நறுமணம் சமையலறையை நிறைத்தது.

பங்கேற்ற தந்தையரில் ஆக இளையவருக்கு வயது 63. ஆக மூத்தவருக்கு வயது 82. 

நிகழ்ச்சியில் பங்குபெற்ற முன்னாள் முழுநேர ராணுவ அதிகாரியும் பள்ளி செயலாக்க நிர்வாகியுமான தனபால் ராமசாமி, 72, இதற்குமுன் தான் உணவு சமைத்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறினார். 

“இந்த நிகழ்ச்சிக்காக நான் தக்காளிச் சோறும் முட்டை ‘ஆம்லெட்’டும் செய்தேன். குறைந்த உப்பைச் சேர்த்து அதனை ஆரோக்கியமான முறையில் தயாரித்தேன்,” என்று அவர் கூறினார்.

தற்போது ஓய்வுபெற்றுள்ள திரு தனபால், இதுபோன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்படி தம்மையொத்த வயதினரை ஊக்குவிக்கிறார். 

உணவு சமைக்கும் தந்தை.
உணவு சமைக்கும் தந்தை. - படம்: சன்லவ் இல்லம்

“இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நிச்சயம் பலன் தரும். நம்மைத் துடிப்புடன் வைத்து சமூகத்துடன் இணைக்க இத்தகைய நடவடிக்கைகள் உதவுகின்றன,” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த சன்லவ் இல்லம் விரும்புவதாக நிலைய மேலாளர் ஆல்பர்ட் எகப்பிட்டஸ் பெரேரா தெரிவித்தார். 

“குடும்பத்தலைவிகளுக்குக் கணவன்மார் தங்கள் சமையல் மூலம் அன்பை வெளிப்படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்த ஆண்டும் சமையல் நிகழ்ச்சியை நடத்த விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார். 

குறிப்புச் சொற்கள்