தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தண்ணீர் விவகாரத்திற்கு சுமுகத் தீர்வு: சிங்கப்பூர், மலேசியப் பிரதமர்கள் உறுதி

3 mins read
புதிய அம்சங்களில் ஒத்துழைக்க இரு தலைவர்களும் ஆர்வம்
425d0d43-5c0c-44d9-a8f7-316d5b16d1eb
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (இடது) மற்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே முடிவு காணப்படாத தண்ணீர், வான்வெளி, கடற்துறை விவகாரங்களுக்குத் தீர்வு காணவும் புதிய ஒத்துழைப்பு மூலம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும் இருநாட்டுப் பிரதமர்களும் உறுதியளித்துள்ளனர்.

பிரதமராகப் பதவி ஏற்று அறிமுகப் பயணமாக புருணைக்கும் மலேசியாவுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், ஜூன் 12ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசியப் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் திரு அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.

மதிய உணவின்போது இரு பிரதமர்களும் தனிப்பட்ட சந்திப்பு நடத்தினர். அதனைத் தொடர்ந்து இரு பிரதமர்களும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர் .

இரு நாடுகளுக்கும் பலன் தரும் வகையில் நீடித்துவரும் விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்து தீர்வுகாணப்படும் என்று பிரதமர் வோங் நம்பிக்கை அளித்தார்.

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள இருநாட்டுத் தலைவர்களின் வருடாந்தர சந்திப்பிற்குமுன் இந்த விவகாரங்களுக்குத் தீர்வு கிடைத்தால் அருமையாக இருக்கும் என்ற திரு அன்வார், ஆனால் அது சற்று அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு என்பதை ஒப்புக்கொண்டார்.

இவற்றுக்குத் தீர்வு காண்பதன்மூலம் இரு அண்டை நாடுகள் எப்படி சிறப்பாக விளங்குவது என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வட்டாரத்துக்கும் உலகத்துக்கும் விளங்கவேண்டும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கட்டிக்காத்துள்ள நல்லுறவை நிலைநாட்டி திரு அன்வாருடனான உறவை மேலும் வலுப்பெறச் செய்வதே தமது பயணத்தின் தலையாய நோக்கம் என்றார் பிரதமர் வோங்.

“ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே மின்னிலக்கப் பொருளியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற வளர்ந்துவரும் துறைகள் உட்பட சுகாதாரம், கல்வி, கலாசாரம், வர்த்தகம், முதலீடு போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பு உள்ளதைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.

“குறிப்பாக, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம், ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து ரயில்சேவை திட்டங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்,” என்று கூறினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

மக்களின் நடமாட்டத்துடன் பொருள்களையும் முதலீடுகளையும் இருநாடுகளுக்கும் இடையே பெருக்குவதோடு இரு நாடுகளையும் மேலும் நெருக்கமாக்கி மலேசியர்களையும் சிங்கப்பூரர்களையும் பலன் பெற செய்யும் என்றார் பிரதமர் வோங்.

மலேசியாவின் பல பகுதிகளுக்கு சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர்கள் வந்து ஆங்கிலம் மற்றும் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் தமது யோசனையைப் பிரதமர் வோங் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி என்றார் பிரதமர் அன்வார்.

அதிகாரிகள் மூலமோ அமைச்சர்கள் மூலமோ அல்லாது பிரதமர்கள் இருவரும் இந்தத் திட்டம் குறித்து பேசியதாக திரு அன்வார் பகிர்ந்தார்.

“தண்ணீர், விமானத் தகவல்களுக்கான வான்வெளி வட்டாரம், கடல்வெளி எல்லை போன்ற ஏற்கெனவே நீடிக்கும் விவகாரங்களுக்கான பொதுப்படையான பேச்சுவார்த்தையும் பொருளியல் வட்டாரம், நிதித்துறை வட்டாரம், அதிகரிக்கும் வர்த்தக நிலவரம், முதலீடுகள் குறித்த கலந்துரையாடல்களும் நடத்தினோம்,” என்றார் பிரதமர் அன்வார்.

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போட்டி பற்றிப் பலர் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், உண்மையில் அதைவிட பெரிய அளவிலான போட்டி என்பது வெளியில் உள்ளது என்றார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்