சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றோடு ஒன்று போட்டி போடாமல் இணைந்து செயல்பட்டு கூட்டாக போட்டித்தன்மையை மேம்படுத்தி அதிகளவு முதலீடுகளை இந்த வட்டாரத்திற்குள் ஈர்க்கவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
உலகப் பொருளியலின் இயந்திரமாகத் தொடர்ந்து ஆசியா விளங்குகிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆசியாவில் முதலீடுகளைப் பரந்த அளவில் செய்ய விருப்பப்படுவதால் இந்த முதலீடுகளை ஈர்க்க மற்ற நாடுகளும் போட்டி போடுகின்றன.
எனவே, சிங்கப்பூரும் மலேசியாவும் கூட்டாகச் சேர்ந்து பொருளியல் தளத்தை விரிவுபடுத்தி இருநாட்டு மக்களுக்குப் பலன்களை விளைவிக்கும் வழிகளை ஆராயவேண்டும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
புருணைக்கும் மலேசியாவிற்கும் அவர் மேற்கொண்ட இருநாள் அறிமுகப் பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் செய்தியாளர்களை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்தார்.
பிரதமரின் பணிகளில் வெளியுறவுத் தொடர்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்று விளக்கிய திரு வோங், பங்காளித்துவங்களை வலுப்படுத்துவது, தொடர்புகளை உருவாக்குவது போன்ற பணிகளைத் தொடரவேண்டும் என்றார். அதனால் நாம் செயல்படும் தளத்தை விரிவுபடுத்தி மக்களுக்குப் பலன்களைக் கொண்டுசேர்க்கலாம் என்றார் அவர்.
சிங்கப்பூருக்கு மிக அருகில் உள்ள இரு நாடுகளுடன் அறிமுகப் பயணங்களைத் தொடங்கியுள்ள பிரதமர், இதர ஆசியான் தலைநகரங்களுக்குச் செல்ல இருப்பதாகக் கூறினார். தமது முந்தைய பொறுப்புகளில் இந்த நாடுகளுக்கு அவர் சென்று வந்திருந்தாலும் பிரதமர் என்ற முறையில் சந்திப்பு நடத்துவது முக்கியம் என்றார்.
இருதரப்பும் இணைந்து செயல்படுவதற்கான நல்லுறவைப் பேணவும் தலைமைத்துவ நிலையில் உறவுகளை நிலைநாட்டவும் இந்த அறிமுகப் பயணங்கள் அவசியம் என்றும் ஒட்டுமொத்த உறவுகளுக்கு அது அடித்தளமிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
புருணை, மலேசியா ஆகிய இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் இன்னும் பல வழிகளில் இணைந்து செயல்பட முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புருணையுடனான உறவு சிறப்பாகவும் வலுவாகவும் நீடித்து வருவதைச் சுட்டிய பிரதமர், தற்காப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற வெவ்வேறு வழிகளில் இன்னும் அதிகம் செய்யலாம் என்றார்.
புருணை சுல்தான் 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு அரசமுறை பயணம் மேற்கொண்டபோது உணவுப் பாதுகாப்பு, மருந்து விநியோகச் சங்கிலி, நீடித்த நிலைத்தன்மை, பசுமை எரிசக்தி, பொதுச் சேவை, கல்விப் பரிமாற்றங்கள் போன்ற அம்சங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்றும் அவற்றில் சில அண்மையில்தான் தொடக்கம் கண்டன என்றும் கூறினார் பிரதமர். அடுத்த முறை சுல்தான் சிங்கப்பூர் வரும்போது இவற்றில் நல்ல முன்னேற்றங்கள் காணப்பட்டு புதிய அம்சங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தலாம் என்றும் அவர் பகிர்ந்தார்.
உதாரணத்திற்கு, தற்போது புருணையிலிருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது. இதுபோன்ற வேறு பல வாய்ப்புகளும் கிடைக்கலாம் என்றார் திரு வோங்.
மலேசியாவுடன் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் சில விவகாரங்களுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்படவில்லை என்றாலும் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார். எனினும், இதனால் ஒட்டுமொத்த உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் புதிய ஒத்துழைப்புகளில் ஈடுபடுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் விளக்கினார்.
பல வெவ்வேறு வழிகளில் இருதரப்பும் செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், அவற்றால் இருநாட்டு இணைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்றும் நம்பிக்கை அளித்தார்.
சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான விரைவு போக்குவரத்து ரயில், சிறப்புப் பொருளியல் வட்டாரம் போன்ற திட்டங்கள் இந்த வட்டாரத்தை மேலும் துடிப்புமிக்கதாவும், போட்டித்தன்மைமிக்கதாகவும் ஆக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், பொருத்தமான காலத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
ஆசியான், ஏபெக், ஜி20 சந்திப்புகள் நடைபெறும் காலங்கள் அனைவருக்கும் தெரிந்தவை. அக்காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குத் தாம் பயணம் மேற்கொள்ளும்படி இருக்கும். அதனால் தொடர்ந்து தேர்தல் குறித்த ஊகங்கள் இருக்கத்தான் செய்யும் என்றார் அவர்.
சிங்கப்பூரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமக்குச் செய்யவேண்டிய பணிகள் அதிகம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசியான் குறித்து கருத்துரைத்த பிரதமர், அமைதியான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கடல், வான்வெளி சுதந்திரம், அனைத்துலகச் சட்டத்துக்கு உடன்படுவது போன்ற அம்சங்களில் கலந்துரையாடல்களையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ள சிங்கப்பூர் ஊக்கப்படுத்தும் என்றார்.